×

திருப்பத்தூர்- சேலம் மெயின் ரோட்டில் புழுதி பறக்கும் சாலையால் பொதுமக்கள் அவதி

திருப்பத்தூர்: திருப்பத்தூர்- சேலம் மெயின் ரோட்டில் புழுதி பறக்கும் சாலையால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாணியம்பாடியில் இருந்து ஊத்தங்கரை வரை நான்கு வழி சாலை திட்டம் ₹362 கோடி மதிப்பில் மத்திய சாலை திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகிறது. இந்த பணியானது தற்போது வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் வரை பணிகள் முற்றிலுமாக முடிவடைந்துள்ளது. இந்நிலையில் சேலம் மெயின் ரோட்டில் இருந்து ஊத்தங்கரை வரை சுமார் 25 கிலோமீட்டர் தூரம் சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் திருப்பத்தூர் நகரப் பகுதியில் உள்ள சேலம் மெயின் ரோட்டில் சாலை போடும் பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால் அந்தப் பணிகள் தற்போது தொய்வடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் சேலம் நெடுஞ்சாலையில் உள்ள ஆதிசக்தி நகர், ராவுத்தம்பட்டி, எலவம்பட்டி கூட்ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள்  சாலை முழுவதும் தூசி பறந்து புழுதிகள் நிறைந்த சாலைகளாக காட்சியளிக்கிறது.  இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் பனிமூட்டத்தில் செல்வது போல் வாகனங்களில் செல்கின்றனர்.

மேலும் புழுதி பறந்த சாலையில் செல்லும்போது தூசி பறந்து பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயமும் ஏற்படுகிறது. அதேபோல் இந்த சாலையை   கடக்கும்போது பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. எனவே இந்த சாலை விரிவாக்க திட்ட பணிகளை விரைவில் நடத்தி முடிக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Tirupathur- ,Salem , Citizens suffer due to flying dust on Tirupathur-Salem main road
× RELATED வாணியம்பாடியில் பணப்பட்டுவாடா!:...