×

கும்பகோணம் அருகே தயாரான ரூ5 கோடியில் 23 அடி உயர ஐம்பொன் நடராஜர் சிலை: வேலூர் பொற்கோவிலுக்கு அனுப்பி வைப்பு

பாபநாசம்: கும்பகோணம் அருகே ரூ 5 கோடியில் 23 அடி உயர ஐம்பொன்னால் ஆன, ஆனந்த நடராஜர் சிலை லாரி மூலம் வேலூர் பொற்கோவிலுக்கு நேற்று மாலை அனுப்பி வைக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திம்மக்குடியை சேர்ந்த சிற்பச்சாலை உரிமையாளர் வரதராஜன். இவர், கடந்த 2010ம் ஆண்டு 23 அடி நடராஜருக்கு, ஐம்பொன் உலோகங்களை கொண்டு ஒற்றை வார்ப்பு முறையில் ஊற்றி பணியினை தொடங்கினார்.

பின்னர், போதிய நிதி இல்லாததால் அந்த பணி பாதியில் நின்றது. தொடர்ந்து 2012-ம் ஆண்டு வேலூர் நாராயண சக்தி பீடத்தின் ஒத்துழைப்போடு மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டு 10 ஆண்டில் பணிகள் முடிவடைந்தது. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில், கடந்த மாதம் 12ம் தேதி நடராஜர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து ஏராளாமனோர் வழிப்பட்டு சென்றனர். இந்நிலையில், ஆனந்த தாண்டவ நடராஜர் சிலைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பின்னர் பீடம் தனியாகவும், திருவாச்சியுடன் சாமி தனியாகவும் கிரேன் உதவியுடன் தனித்தனியாக பிரிக்கப்பட்டு நேற்று மாலை இரண்டு லாரிகளில் வேலூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து சிலை வடிவமைத்த வரதராஜன் கூறியதாவது: ரூ5 கோடி மதிப்பில் 23 அடி உயரமும், 17 அடி அகலமும் கொண்ட 15 டன் எடையிலான ஆனந்த தாண்டவ நடராஜர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, திம்மங்குடியில் இருந்து நீலத்தநல்லுார், அரியலூர் மாவட்டம் தா.பழூர், ஜெயங்கொண்டம், விருத்தாசலம், உளுந்துார்பேட்டை, திருக்கோவிலுார், திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூர் சாலை வழியாக வேலூர் புரம் நாராயணி பீடம் பொற்கோவிலுக்கு நாளை (இன்று) சென்றடைகிறது என்றார்.

Tags : Kumbakonam ,Vellore Golden Temple , 23-feet tall Aimpon Nataraja statue made at Rs 5 crore near Kumbakonam: Sent to Vellore Golden Temple
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...