சென்னை கந்தசாமி கோயிலில் உணவு வழங்கும் நிகழ்ச்சி: இணை ஆணையர் தொடங்கி வைத்தார்

தண்டையார்பேட்டை: வள்ளலார் பிறந்த நாளை தனி பெரும் கருணை நாளாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும் ஆண்டு முழுவதும் உணவு வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக வள்ளலார் வாழ்ந்த பகுதியான பார்க்டவுன் கந்தகோட்டம் கந்தசாமி கோயிலில் உள்ள வசந்த மண்டபத்தில் உணவு வழங்கும் நிகழ்ச்சியை நேற்று இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால் தொடங்கி வைத்தார். அப்போது ஆர்வமுடன் இறையன்பர்கள், பொதுமக்கள், பக்தர்கள் கலந்துகொண்டு உணவு அருந்தினர்.

இதைதொடர்ந்து, இணை ஆணையர் தனபால் கூறியதாவது: வள்ளலார் பிறந்த நாளை தனிபெரும் கருணை நாளாக தமிழக முதல்வர் அறிவித்து உணவு வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதன்அடிப்படையில் இந்த பகுதியில் தங்கியிருந்த வள்ளலாரின் நினைவாக இங்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. இது கந்தசாமி கோயிலில் 3 நாட்கள்,  தங்க சாலை தெருவில் உள்ள வள்ளலார் இல்லத்தில் 3 நாட்கள் மற்றும் திருவெற்றியூர் பட்டினத்தார் கோயிலில் 3 நாட்களுக்கு உணவு வழங்கப்படும்.

இதேபோல், தொடர்ந்து அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை உணவு வழங்கப்படும். முதல் 30 நாள் சென்னையில் வழங்கப்பட்டு, பின்னர் மற்ற மாவட்டங்களில் வழங்கப்படும். வள்ளலாரின் முக்கியமான கொள்கை அடுத்தவரின் பசியாற்றுவது, அதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இந்நிகழ்ச்சியில், சென்னை மாவட்ட உதவி ஆணையர் பாஸ்கரன், செயல் அலுவலர்கள், கொளஞ்சி நற்சோனை மற்றும் ஊழியர்கள், இறை அன்பர்கள், பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: