×

ஆந்திராவில் தசரா நிறைவு நாளில் தடியால் தாக்கும் விழாவில் சிறுவன் பலி: 50 பக்தர்கள் படுகாயம்

திருமலை: கர்னூல் சிவன் கோயிலில் தடிகளால் தாக்கி ரத்தம் சிந்தும் விழாவில் 14 வயது சிறுவன் உயிரிழந்தார். மேலும், 50 பக்தர்கள் படுகாயமடைந்தனர். ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம் தேவரகட்டு மலை குன்று மீது பழமையான மாலமல்லேஷ்வர (சிவன்) சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தசரா நிறைவு நாளன்று பக்தர்கள் ஒருவருக்கு ஒருவர் தடிகளால் தாக்கி கொண்டு ரத்தம் சிந்தும் (கார்ல உற்சவம்) திருவிழா நடைபெறும். இந்தாண்டு தசரா நிறைவு நாளான நேற்று முன்தினமும் இந்த திருவிழா நடந்தது.

இதில், பங்கேற்க 14 கிராமங்களை சேர்ந்தவர்கள் வந்தனர். நேற்று முன்தினம் மாலை துவங்கிய இந்த உற்சவம் நேற்று காலை வரை நடந்தது. விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் இரும்பு கூம்புகள் பொருத்தப்பட்ட தடிகளை பயன்படுத்தி ஒருவரை மற்றவர் தாக்குவது வழக்கம். அப்போது ஏற்படும் காயத்தில் இருந்து சொட்டும் ரத்தத்தை புராண காலத்தில் அப்பகுதியில் இறைவன் வதம் செய்ததாக கூறப்படும் ராட்சதனுக்கு பக்தர்கள் சமர்ப்பிப்பார்கள். பக்தர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில் 50 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில், திருவிழாவில் பங்கேற்ற 14 வயது சிறுவன் காயத்தால் உயிரிழந்தான். இதனால், அப்பகுதியில் சோகம் நிலவுகிறது.

Tags : Dussehra ,ceremony ,Andhra Pradesh , Boy killed in Dussehra caning ceremony in Andhra Pradesh: 50 devotees injured
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி