×

ஓராண்டுக்கான படிப்பில் 10 மாதங்கள் பூர்த்தி செய்த பிறகே தேர்வு எழுத வேண்டும்: பெரியார் பல்கலைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: ஓராண்டுக்கான படிப்பில் 10 மாதங்கள் பூர்த்தி செய்த பிறகே தேர்வெழுதும் திட்டத்தை கொண்டு வர பெரியார் பல்கலைக்கழகத்துக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம், தேவதானப்பட்டியைச் சேர்ந்த செண்பகம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘2012ல் பிஎஸ்சி (கணிதம்) முடித்தேன். 2013ல் பிஎட் முடித்தேன். பெரியார் பல்கலையில், கடந்த 2015ல் எம்எஸ்சி (கணிதம்) முடித்தேன். 9.5.2017ல் முதுகலை பட்டதாரி (கணிதம்) ஆசிரியர் நியமன அறிவிப்பை ஆசிரியர் தேர்வாணையம் வெளியிட்டது.

இதற்கான தேர்வில் 77 மதிப்பெண் பெற்றேன். வேலைவாய்ப்பக பதிவு மூப்பிற்காக ஒரு மதிப்பெண் வழங்கப்பட்டது. மொத்தமாக 78 மதிப்பெண் கிடைத்ததால், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றேன். ஆனால் பட்டியலில் என் பெயர் இல்லை. 2012-2014 மற்றும் 2012-2013ல் இரு பட்டங்கள் பெற்றுள்ளதாக கூறி என்னை நிராகரித்துள்ளனர். நான் முறையாகத்தான் படித்துள்ளேன். எனவே, வெளியான பட்டியலை ரத்து செய்து, எனக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் வழங்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்து பிறப்பித்த உத்தரவு: பெரியார் பல்கலையில் கல்வி ஆண்டு மற்றும் காலண்டர் ஆண்டு என்ற கணக்கில் வகுப்புகள் நடக்கின்றன. மனுதாரர் காலண்டர் ஆண்டில் ஆக. 2013ல் சேர்ந்துள்ளார். ஜன. 2014ல் தேர்வு நடந்துள்ளது. இரண்டாம் ஆண்டிற்கான தேர்வு டிச. 2014ல் நடந்துள்ளது. இதன்படி மனுதாரர் 2 ஆண்டு படிப்பையும் முடித்துள்ளார். ஜூன் முதல் மே வரையில் கல்வி ஆண்டும், ஜனவரி முதல் டிசம்பர் வரை காலண்டர் ஆண்டும் கணக்கிடப்படுகிறது. தொலைதூர கல்வி திட்டத்தில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்திடவே இந்த முறை பின்பற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இருவேறு காலக்கட்டத்தில் தான் படிப்பை முடித்துள்ளார். எனவே, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கான பட்டியலில் மனுதாரர் பெயரை சேர்த்து, பட்டியல் வெளியிட வேண்டும். இதையடுத்து மனுதாரருக்கு 4 வாரத்தில் பணி நியமன ஆணை வழங்க வேண்டும்.

காலண்டர் ஆண்டு மற்றும் கல்வி ஆண்டு என்ற இரு முறையால்தான் குழப்பம் ஏற்படுகிறது. அக்டோபரில் சேர்ந்தவர், டிசம்பரில் முதலாண்டு தேர்வை எழுதுகிறார். இது முழு படிப்பையும் படித்தது ஆகாது. இரண்டு மாத இடைவெளியில் ஓராண்டு படிப்பை நிறைவு செய்யும் நிலை உள்ளது. ஜூனில் சேர்ந்தால், அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரலில் தான் தேர்வு நடக்கும். அப்போது அந்த மாணவர் குறைந்தது 10 மாதம் படித்திருப்பார். அதன்பிறகு அவர் தேர்வெழுதுவார். எனவே, ஓராண்டு படிப்பை ஒரு மாணவர் குறைந்தது 10 மாதங்கள் பூர்த்தி செய்த பிறகு தேர்வு எழுதிடும் வகையிலான திட்டத்தை பல்கலையில் கொண்டு வர வேண்டும். படிப்பை முடித்ததற்கான சான்று வழங்கும்போது எப்போது முடித்தார் என்பதையும் குறிப்பிட வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

Tags : ICourt Branch ,Periyar University , Examination to be written after completion of 10 months of one-year course: ICourt Branch orders Periyar University
× RELATED அதிக புகை கக்கும் வாகனங்களுக்கு...