தொழில் முதலீட்டிற்கு உகந்த மாநிலமாக உள்ளதால் தமிழகத்தில் தொழில் தொடங்க வர வேண்டும்: செக் குடியரசு சர்வதேச கண்காட்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு

சென்னை: தொழில் முதலீட்டிற்கு உகந்த மாநிலமாக உள்ளதால், தமிழகத்தில் தொழில் தொடங்க முதலீட்டாளர்கள் முன்வர வேண்டும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுத்துள்ளார். தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அரசு முறை பயணமாக செக் குடியரசு நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் சர்வதேச கண்காட்சியில் கலந்து கொண்டார். கண்காட்சியில் அவர் பேசியதாவது: இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இந்தியாவிலேயே ஏற்றுமதி மற்றும் வணிகம் செய்வதில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது. இங்கு 6 விமான நிலையங்கள், 4 பெரிய துறைமுகங்கள், நன்கு இணைக்கப்பட்ட சாலைகள் மற்றும் ரயில் பாதைகள் என ஒருங்கிணைக்கப்பட்ட போக்குவரத்து வசதிகள் உள்ளது.   

தமிழ்நாட்டில் வாகன உற்பத்தி, ஜவுளி, தோல், விமானம் தயாரிப்பு, பாதுகாப்பு, மருந்து போன்ற துறைகளில் 5 மில்லியனுக்கும் அதிகமான குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. உணவு பதப்படுத்தும் தொழிலில் தமிழகத்தில் உள்ள குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உலகளாவிய வர்த்தக தொடர்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஹூண்டாய், பிஎம்டபிள்யூ, ரெனால்ட் மற்றும் நிசான் போன்ற முக்கிய  வாகன தொழிற்சாலைகள் இங்கு அமைந்துள்ளதால் தமிழ்நாடு இந்தியாவின் வாகன உற்பத்தி மையமாக திகழ்கின்றது.

இந்தியாவின் கனரக மின் உபகரணங்கள்  உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு 8சதவீதம் ஆகும். விமான உற்பத்தி மற்றும் பாதுகாப்பு தளவாட உற்பத்தி துறைக்கு 21.9 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இத்துறையின் வளர்ச்சிக்காக தமிழ்நாட்டில் பாதுகாப்பு தளவாட தொழில் பெரும் வழிதடம் 2019ல் தொடங்கப்பட்டது. இந்தத் துறைகளைத் தவிர்த்து, ஜவுளி, தோல், மின்னணு பொருட்கள் உற்பத்தியிலும் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாடு தொழில் முதலீட்டிற்கு உகந்த மாநிலமாக திகழ்வதால் செக் குடியரசு நாட்டில் உள்ள தொழில் முனைவோர் தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைக்கின்றேன்.

Related Stories: