காரைக்கால்மேடு மீனவ கிராமத்தில் வீட்டு மாடியில் இயற்கை விவசாயம்: காய்கறி, பழம், பூக்கள் பயிரிட்டு இன்ஜி. பட்டதாரி அசத்தல்

காரைக்கால்: புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் ஒன்றான காரைக்கால் மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவில் இன்ஜினியரிங் பட்டதாரி குணபாலன்(23). குணபாலனுடன் பள்ளி மற்றும் கல்லூரியில் படித்த அப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் பெரும்பாலும் தனது மூதாதையர்களின் பூர்விக தொழிலான மீன்பிடி தொழிலிலேயே ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் குணபாலன் சிவில் இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு திடீரென விவசாயத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ஆனால் குனபாலனிடம் விவசாயம் செய்யும் அளவிற்கு தேவையான நிலம் அவரிடம் இல்லை.அவர் விவசாய சார்ந்த புத்தகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் விவசாய சார்ந்த தகவல்கள் மற்றும் வீடியோக்கள் பார்த்து கற்றுக் கொண்டுள்ளார்.

அதனை வழிகாட்டுதலாக கொண்டு தனது வீட்டு மாடியில் காய்கறிகள், கீரைகள் உள்ளிட்ட செடிகளை பயிர் செய்துள்ளார். சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கப்பட்ட வீட்டு மாடி ஆன தனது வீட்டில் சுமார் 700 சதுர அடி பரப்பளவில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட மாடித்தோட்டம் தற்பொழுது பத்து மடங்கிற்கு மேலாக பிரம்மாண்டமாக பல்வேறு வகையான சாகுபடிகளை செய்து வருகிறார்.

 

இதன் விளைவாக இன்று மாடி தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள சூரியகாந்தி பூ செவ்வனே வளர்ந்து நிற்கிறது. மேலும் வெண்டைக்காய், பாகற்காய், அவரைக்காய், மிளகாய், கத்திரிக்காய், தக்காளி, வெள்ளரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளை சாகுபடி செய்துள்ள குணபாலன் மணல் பகுதியில் மட்டுமே பயிரிடப்படும் சோளத்தையும் பயிரிட்டு அறுவடை செய்யும் அளவிற்கு வளர்த்துள்ளார்.

மாடி தோட்டத்தில் ஒரு பகுதியில் பூக்களும் பூத்து குலுங்குவதால் கடற்கரை ஓரத்தில் இயற்கை வாசத்துடன் மலர்களின் வாசமும் அப்பகுதியில் ரம்யத்தை கூட்டுகிறது. தனது வீட்டு மாடி தோட்டத்தில் பயிரிடப்படும் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை தனது வீட்டிற்கும் பயன்படுத்தி, அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கும் விற்பனை செய்து வருகிறார். குணபாலன் வளர்த்து வரும் செடிகளுக்கு ரசாயன உரங்களை தவிர்த்து இயற்கை உரங்களான மாட்டுச்சாணம்,மக்கிய தழைகள், பழைய காய்கறிகள் உரங்களையே பயன்படுத்தி வருகிறார்.

Related Stories: