×

வடகொரியா இன்று மீண்டும் ஏவுகணை வீச்சு

சியோல்: வடகொரியா இன்று மீண்டும் ஏவுகணை வீச்சில் ஈடுபட்டது. அந்த ஏவுகணை கிழக்கு கடற்பகுதியில் வான்பரப்பை கடந்து சென்று பசிபிக் கடலில் விழுந்துள்ளது. அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு சவால் விடுக்கும் வகையில் வட கொரியா அண்மை காலமாக தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவுக்கு சொந்தமான குவாம் தீவு வரை சென்று தாக்கும் திறன் கொண்ட தனது ஏவுகணையை ஜப்பானுக்கு மேலே பறக்க செய்து கடலில் செலுத்தி வட கொரியா நேற்று சோதித்தது. இதை தொடர்ந்து ஜப்பான் அரசு, நாட்டு மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரித்தது. 2017ம் ஆண்டுக்கு பிறகு ஜப்பானுக்கு மேல் பறந்த முதல் வட கொரிய ஏவுகணை இதுவாகும்.

இதற்கு பதிலடியாக, தனது குறைந்த தொலைவு ஏவுகணையான ஹூமூ-2 ஏவுகணையை தென் கொரியா நேற்று சோதித்தது. எனினும், அந்த ஏவுகணை தரையில் விழுந்து வெடித்து சிதறியது. ஏவுகணை வெடித்ததும் அதனைத் தொடர்ந்து பரவிய தீயும் அந்த பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியது. வட கொரியாதான் தங்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக பலர் பீதியடைந்தனர். எனினும், இந்தச் சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், வடகொரியா இன்று அதிகாலை அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் வல்லமை கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்தது. வடகொரியாவில் இருந்து ஏவப்பட்ட அந்த ஏவுகணை ஜப்பான், தென்கொரியாவை நோக்கி கிழக்கு கடற்பகுதியில் வான்பரப்பை கடந்து சென்று பசிபிக் கடலில் விழுந்துள்ளது. இதனை தென்கொரிய கூட்டு ராணுவ படை உறுதி செய்துள்ளது.



Tags : North Korea , North Korea fired missiles again today
× RELATED வட கொரியா அடுத்தடுத்து ஏவுகணை சோதனை