வியாசர்பாடியில் இன்ஸ்டாகிராம் மூலம் 2 பேரிடம் நூதன முறையில் ரூ.1.19 லட்சம் பறிப்பு

பெரம்பூர்: வியாசர்பாடியில் இன்ஸ்டாகிராம் மூலம் 2 பேரிடம் நூதன முறையில் ரூ.1.19 லட்சம் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வியாசர்பாடி, சுந்தரம் பவர் லைன் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த் (29). வங்கி ஊழியர். இவர் கடந்த 3ம் தேதி இன்ஸ்டாகிராம் மூலமாக விலையுயர்ந்த 2 கைக்கடிகாரங்களுக்கு ரூ.75 ஆயிரம் முன்பணம் கொடுத்து ஆர்டர் செய்துள்ளார். இவர் பணம் கட்டிய சிறிது நேரத்தில், அந்த இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டது. இதனால் அப்பக்கத்தை பிரசாந்த்தால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து நேற்று வியாசர்பாடி போலீசில் பிரசாந்த் புகார் அளித்தார்.

 

இதேபோல் வியாசர்பாடி, 3வது தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (19). தனியார் பொறியியல் கல்லூரி மாணவர். இவர் கடந்த 3ம் தேதி இன்ஸ்டாகிராம் மூலம் ரூ.44 ஆயிரம் பணம் கட்டி லேப்டாப் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். பணம் பெற்ற சிறிது நேரத்திலேயே அந்த இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டது. இதனால் சம்பந்தப்பட்ட பக்கத்தை சதீஷ்குமாரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, நேற்று மாலை வியாசர்பாடி போலீசில் புகார் அளித்தார்.

 

போலி இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் 2 பேரிடம் நூதன முறையில் ரூ.1.19 லட்சத்தை மர்ம நபர்கள் பறித்திருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இந்த 2 புகார்களின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, போலி இன்ஸ்டாகிராம் மூலமாக ஏமாற்று வேலையில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இன்ஸ்டாகிராம் மூலம் 2 பேரிடம் நூதன முறையில் ரூ.1.19 லட்சம் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: