×

தூத்துக்குடி துறைமுக சாலையில் மந்தகதியில் மேம்பால பணி விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

ஸ்பிக்நகர்: தூத்துக்குடி துறைமுக சாலையில் ஆமை வேகத்தில் நடந்து வரும் மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி  துறைமுக சாலையில் மேம்பால பணிகள் நடந்து வருகிறது. இதனால்  முத்தையாபுரம் பகுதியில் இருந்து தூத்துக்குடிக்கும், தூத்துக்குடியில் இருந்து முத்தையாபுரம் பகுதிக்கு செல்வதற்கும் உப்பாற்று ஓடை பகுதியில் மேம்பால பணிகள் நடைபெறும் இடத்தில் பக்கவாட்டில்  1 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று மீண்டும் திரும்பி வர வேண்டி உள்ளது. இந்த  பகுதிகளில் இரவு நேரங்களில் போதுமான வெளிச்சம் இல்லாத காரணத்தால் இருச்சக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. தூத்துக்குடி துறைமுக சாலையில் ஏராளமான ஷிப்பிங்  நிறுவனங்கள், பட்டாணி, யூரியா, காப்பர் கான்ஸ்சென்ட்ரேட், ராக்பாஸ்பேட் போன்றவை தேக்கி வைக்கக் கூடிய குடோன்கள், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் உப்பளங்கள், துறைமுகம் உள்ளிட்டவை அமைந்துள்ளதால் வாகன போக்குவரத்து மிகுந்து காணப்படுகிறது.

 இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 24 மணி  நேரமும் பரபரப்பாக இயங்க கூடிய பகுதிகளில் தூத்துக்குடி துறைமுக சாலையும்  ஒன்றாக விளங்கி வருகிறது. இதேபோல தூத்துக்குடி துறைமுக கடற்கரை, பனிமய மாதா ஆலயம், திருச்செந்தூர் முருகன் கோயில், மணல் மாதா ஆலயம், நவதிருப்பதி கோயில்கள் உள்பட ஏராளமான புகழ்பெற்ற ஆன்மீக ஸ்தலங்களுக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக வாகனங்களில் வருவோர், தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலை உப்பாற்று ஓடை பகுதியை கடந்துதான் செல்ல வேண்டும். இந்நிலையில் கடந்த ஓராண்டாக இப்பகுதியில் மேம்பால பணிகள், ஆமை வேகத்தில் நடந்து வருவதால் வாகன ஓட்டுநர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக மேம்பால பணி நடைபெறும் இடத்தில் வாகனங்கள் எதிர் எதிர் திசையில் செல்வதற்கு சுமார் 1 கிமீ தூரம் சென்று திரும்ப வேண்டியுள்ளது. இந்த பகுதியை தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. சில வாகன ஓட்டுநர்கள், வாகன விதிமுறைகளை மீறி எதிர் திசையில் இயக்கும்போது போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் தொடர் கதையாகின்றன. எனவே உப்பாற்று ஓடை மேம்பால பணியை விரைந்து முடிப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பீக் அவரில் கூடுதல் போலீசாரை நிறுத்தி போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கின்றனர்.

Tags : Mantakathi ,Thoothukudi Harbor Road , Public demand for speedy completion of flyover work at Mantakathi on Thoothukudi Harbor Road
× RELATED துவங்கி 2 மாதமாகியும் மண் அள்ள தாமதம்...