×

கோவையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் கிழக்கு புறவழிச்சாலை: 6 வழிப்பாதையுடன் அமைக்க ஒப்புதல்

தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் சுற்றுச்சாலை என்று அழைக்கப்படும் ரிங் ரோடுகள் போக்குவரத்து நெருக்கடி பிரச்சினையை தீர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நகருக்குள் கனரக வாகனங்கள் வராமல் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு செல்வதற்கு இந்த ரிங் ரோடுகள் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இது குறித்து கோவை தொழில்துறையினர் கூறியதாவது: தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பெற்ற முதன்மை நகரமான கோவையில் ரிங் ரோடுகள் அமைக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். அதன்படி கோவையில் ஏற்கனவே உள் சுற்றுச்சாலை என்று அழைக்கப்படும் இன்னர் பைபாஸ் சாலையான எல் அண்டு டி பைபாஸ் சாலை கோவையின் ஒரு பகுதியை மட்டுமே இணைக்கிறது.

அதாவது கோவை-அவினாசி சாலை, கோவை-திருச்சி சாலை, கோவை-பொள்ளாச்சி சாலை, கோவை-பாலக்காடு சாலைகளை இணைக்கிறது. ஆனால் கோவை-மேட்டுப்பாளையம் சாலை, கோவை-சத்தி சாலைகளை எல் அண்டு டி பைபாஸ் சாலை இணைப்பதில்லை. இதனால் ரிங் ரோடு முழுமையடையாமல் உள்ளது. இதனால் கோவைக்கு வரும் முக்கிய 6 நெடுஞ்சாலைகளை வெளிப்புறத்தில் இணைக்கும் வகையில் மேற்கு புறவழிச்சாலை (ரிங் ரோடு) மற்றும் கிழக்கு புறவழிச்சாலைகள் (ரிங் ரோடுகள்) அமைக்கப்பட உள்ளன. இதில் மேற்கு புறவழிச்சாலை மதுக்கரையிலிருந்து நரசிம்மநாயக்கன்பாளையம் வரை சுமார் 38 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட உள்ளது.

இதில் முதல் கட்டமாக 11.8 கிலோ மீட்டரும், 2ம் கட்டமாக 12.1 கிலோ மீட்டரும், 3ம் கட்டமாக 14 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்கப்படுகிறது. கோவையின் தெற்கு பகுதியையும், வடக்கு பகுதியையும் இணைக்கும் மேற்கு புறவழிச்சாலைக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நான்கு வழி சாலையாக அமையும் இந்த திட்டத்துக்கான நிதியையும் மாநில அரசு ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கோவையின் வடக்கு பகுதியை கிழக்கு பகுதியோடு இணைப்பதற்கான கிழக்கு ரிங் ரோடு 43.2 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட உள்ளது. இந்த கிழக்கு ரிங் ரோடு முதல் கட்டமாக கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் நரசிம்மநாயக்கன்பாளையத்தில் (என்.எச்.181) தொடங்கி கோவை-சத்தி சாலையில் (என்.எச்.948) சரவணம்பட்டி அருகே குரும்பபாளையம், கோவை-அவினாசி சாலையில் (என்.எச்.544) நீலாம்பூர் அருகே கணியூர் வழியாக கோவை-திருச்சி சாலையில் (என்.எச்.81) காரணம்பேட்டையில் முடிவடையும் வகையில் அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்.எச்.ஏ.ஐ.) திட்டமிட்டுள்ளது.

இதன் 2ம் கட்ட சாலை காரணம்பேட்டையில் தொடங்கி கோவை-பொள்ளாச்சி சாலையில் உள்ள செட்டிப்பாளையம், ஒத்தக்கால்மண்டபம் வழியாக கோவை-பாலக்காடு சாலையில் உள்ள மதுக்கரையை அடையும் வகையில் 38.4 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்த மொத்த சாலை கிழக்கு ரிங் ரோடு என்று அழைக்கப்படுகிறது. இது கோவைக்கு வரும் 6 முக்கிய நெடுஞ்சாலைகளையும் ஒன்றிணைக்கிறது. இந்த கிழக்கு புறவழிச்சாலைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது 6 வழிப்பாதையாக அமைய உள்ளது. இதன் மூலம் கிழக்கு ரிங் ரோடும், மேற்கு ரிங் ரோடும் மதுக்கரையில் இணைக்கப்பட்டு கோவையின் வெளிப்புறத்தில் பெரிய ரிங் ரோடாக அமைய உள்ளன.

கோவை மாநகரை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு உற்பத்தியாகும் பொருட்களை வெளியிடங்களுக்கு கொண்டு செல்லவும், மூலப் பொருட்களை தொழிற்சாலைகளுக்கு கொண்டு வரவும் ரிங் ரோடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதன் மூலம் கனரக வாகனங்கள் கோவை நகருக்குள் வர வேண்டிய அவசியமில்லை.இதேபோல காரணம்பேட்டையிலிருந்து கோவை-கரூர் எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது. கோவையிலிருந்து தொடங்கும் இந்த சாலை பல்லடம், பொங்கலூர், கொடுவாய், காங்கேயம், வெள்ளகோவில், பரமத்தி வழியாக கரூரை அடையும் வகையில் சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்படும் இந்த எக்ஸ்பிரஸ் வே 6 வழிச்சாலையாக அமையும்.

இந்த கோவை-கரூர் சாலை ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள கோவை-திருச்சி சாலைக்கு இணையாக சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் அமைய உள்ளது. இதற்கான நிலம் ஆர்ஜிதம் செய்வதில் எந்த சிக்கலும் இருக்காது என்று கூறப்படுகிறது. ஏனென்றால் இதற்கான நிலம் முழுவதும் தரிசு நிலங்களாகும். இந்த 2 திட்டங்களையும் இணைத்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 40 லட்சம் மக்கள் தொகை கொண்ட கோவை மாவட்டத்தின் அடிப்படை கட்டமைப்பு மேம்பட இந்த 2 திட்டங்களும் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

ஆண்டு ஒன்றுக்கு ரூ. 60 ஆயிரம் கோடி மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்யும் மேற்கு மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த 2 சாலைகளும் முக்கிய பங்கு வகிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். கோவை மாநகரை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு உற்பத்தியாகும் பொருட்களை வெளியிடங்களுக்கு கொண்டு செல்லவும், மூலப் பொருட்களை தொழிற்சாலைகளுக்கு கொண்டு வரவும் ரிங் ரோடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

Tags : Eastern Bypass ,Coimbatore , Eastern Bypass to reduce traffic congestion in Coimbatore: Approval to construct with 6 lanes
× RELATED பறக்கும் படையால் வியாபாரம் பாதிப்பு