ஐசிசி டி.20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க இந்திய அணி ஆஸ்திரேலியா பயணம்

மும்பை: 8வது ஐசிசி டி.20 உலக கோப்பை தொடர் வரும் 16ம் தேதி முதல் நவ. 13ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இதில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்ஆப்ரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே உட்பட 8 அணிகள் முதல் சுற்றில் பங்கேற்கும். தலா 4 அணிகள் என 2 பிரிவுகளாக நடைபெறும் இந்த சுற்றில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்நிலையில் உலக கோப்பை டி.20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி இன்று அதிகாலையில் மும்பையில் இருந்து ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு புறப்பட்டுச்சென்றது. காயம் காரணமாக முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இல்லாத நிலையில் கேப்டன் ரோகித்சர்மா, தலைமையில் கே.எல்.ராகுல், விராட்கோஹ்லி, சூர்யகுமார் யாதவ் தினேஷ் கார்த்திக், ரிஷப் பன்ட், ஹர்திக் பாண்டியா, புவனேஸ்வர்குமார், அஸ்வின், சாஹல், ஹர்சல் பட்டேல், அக்சர் பட்டேல், அர்ஷ்தீப் சிங், தீபக்‌ ஹடா ஆகியோருடன் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தலைமையிலான குழுவினர் புறப்பட்டுச்சென்றனர்.

பெர்த் மைதானத்தில் வரும் 13ம் தேதி வரை இந்திய வீரர்களுக்கு பயிற்சி முகாம் நடக்கிறது. மேலும் உள்ளூர் அணியுடன் 2 பயிற்சி போட்டிகளிலும் இந்தியா ஆட உள்ளது. தொடர்ந்து உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் 17ம்தேதி ஆஸ்திரேலியாவுடனும், 19ம் தேதி நியூசிலாந்துடனும் பிரிஸ்பேன் மைதானத்தில் விளையாடுகிறது.

உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி 23ம் தேதி பரமஎதிரி பாகிஸ்தானுடன் மெல்போர்ன் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த உள்ளது. காயத்தால் பும்ரா விலகிய நிலையில் அவருக்கு பதிலாக மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை. அடுத்த வாரத்தில் மாற்றுவீரர் அறிவிக்கப்பட உள்ளார். பெரும்பாலும் முகமதுஷமி தான் அந்த வீரராக இருக்கலாம் என தெரிகிறது. உலக கோப்பைக்கான ரிசர்வ் பட்டியலில் உள்ள முகமது ஷமி, ஸ்ரேயாஸ் அய்யர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர் ஆகியோர் அடுத்த வாரத்தில் ஆஸி. புறப்படுகின்றனர். அவர்களுடன் நெட் பவுலர்களான உம்ரன்மாலிக், சேத்தன் சக்காரியா, குல்தீப் சென்னும் செல்கின்றனர்.

Related Stories: