×

மேட்டூரில் முன்கூட்டியே தண்ணீர் திறந்ததால் நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் அறுவடைக்கு தயாராக உள்ள குறுவை நெல்மணிகள்

நீடாமங்கலம்: தமிழக அரசு முன்கூட்டியே மேட்டூரில் தண்ணீர் திறந்ததால் நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் குறுவை நெற்பயிர்கள் இயந்திரம் மூலம் அறுவடைக்கு தயாராக உள்ளது. இதேபோல் சம்பா சாகுபடிக்கு நாற்றுகளும் நடவு செய்வதற்கு திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம், குடவாசல், வலங்கைமான், திருவாரூர், திருத்துறைபூண்டி, கோட்டூர், முத்துப்பேட்டை, கொரடாச்சேரி, மன்னார்குடி உள்ளிட்ட 10 வேளாண் கோட்டங்களிலும் குறுவை ஓரளவு அறுவடை முடிந்து பல இடங்களில் குறுவை பயிர்கள் இயந்திர அறுவடைக்கு தயாராக இருந்து வருகிறது. இந்திலையில் ஆண்டுதோறும் மேட்டூர் அணையிலிருந்து விவசாயத்திற்கு ஜூன் 12ம் தேதி விவசாயத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கமாக இருந்தது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை அதிக அளவு பெய்ததால் கர்நாடகா அணைகளின் கொள்ளளவு நிரம்பியது.

இதனால் அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீர் லட்சக்கணக்கான கன அடி வரத்தாக மேட்டூர் அணைக்கு வந்து மேட்டூர் அணையின் முழு கொள்ளளவு நான்கு முறை நிரம்பியது. இதனையறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்டா மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் முன் கூட்டியே குறுவை சாகுபடிக்கு மே மாதம் 24ம் தேதியே மேட்டூரில் தண்ணீரை விவசாயத்திற்கு திறந்தார். இதுவே தமிழக முதல்வருக்கு சாதனையாக அமைந்தது. இதனால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து தமிழக முதல்வரை விவசாயிகள் பாராட்டினர். மேட்டூர் அணையில் திறந்த தண்ணீரால் டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரும்பாலானோர் அதிக குறுவை சாகுபடியை தொடங்கினர். முன் கூட்டியே திறந்த தண்ணீரை பயன்படுத்தி மின் மோட்டாரில் சாகுபடி பணி செய்தவர்களும் இந்த ஆண்டு திறக்கப்பட்ட தண்ணீரை பயன்படுத்தி விவசாய பணியை தொடங்கினர். இந்த ஆண்டு குறுவை பருவத்தில் 34,802 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகள் தொடங்கியது. சிலர் இயந்திரம் மூலம் குறுவை அறுவடை செய்து வருகின்றனர்.

சில இடங்களில் குறுவை சாகுபடி செய்த நெல் கதிர்கள், அறுவடைக்கு தயாராக உள்ளது. நிலத்தடிநீரை பயன்படுத்தி சாகுபடி செய்ய முடியாத விவசாயிகள் சம்பா பருவத்தில் ஒரு போகம் மட்டும் சம்பா சாகுபடியை சுமார் 8,448 ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா சாகுபடி பணிக்கு நாற்றங்கால் தயார் செய்து நாற்றுவிட்டு தற்போது சம்பா நடவு பணிக்கு நாற்றங்கால் தயாராகி வருகிறது. கடந்த கோடை பருவத்தில் 12 ஆயிரம் ஏக்கரில் கோடை சாகுபடி பணி நடந்து அறுவடை முடிந்த பிறகே குறுவை சாகுபடி பணி தொடங்கியது. இதன் அறுவடை முடிந்த உடன் தாளடி பணிகள் தொடங்க உள்ளது . குறுவை நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு 65.09 மெட்ரிக் டன் நெல் 50 சத மானியத்தில் விதை கிராம திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் மூலம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது விவசாயம் செய்யவுள்ள சம்பா பருவத்தில் சி.ஆர்.1009 சப் 1 ,ஸ்வர்ணா சப்1 மற்றும் எம்.டி.யு. 7029 போன்ற விதைகள் விவசாயிகளுக்கு 50 சதம் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Neidamangalam Agricultural Fort ,Mattur , Crops of paddy ready for harvest in Needamangalam Agricultural Zone due to early opening of water in Mettur
× RELATED மேட்டூர் அணையின் மேற்குக்கரை பாசன...