மானாமதுரை அருகே கடும் வறட்சியால் காலியான கிராமம்: அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தருமாறு கிராமத்தினர் கோரிக்கை

சிவகங்கை: மானாமதுரை அருகே கடும் வறட்சி காரணமாக பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறியதால் வாடிய கிராமம் வெறிசோடி மயான பூமியாக காட்சியளிக்கிறது. மானாமதுரை ஒன்றியம் அரசகுளம் ஊராட்சியை சேர்ந்த வாடி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வந்தனர். விவசாய தேவைக்கான கண்மாயும், குடிநீர் தேவையை ஊரணியும் போதிய மழை இல்லாததால் வறண்டு விட்டன. இதனால், நெல், வாழை, கேழ்வரகு உள்பட விவசாயம் பொய்த்து போய் வயல்வெளிகளில் கருவேலம் மரங்கள் வளர்ந்துள்ளன.

குடிநீர், கழிப்பிடம், சாலை உள்பட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் பிழைப்பு தேடி வெளியூர்களுக்கு கிராமத்தினர் இடம் பெயர்ந்துள்ளனர். தற்போது மொத்தம் 4 வீடுகளில் முதியோர்கள் மட்டுமே வசிக்கும் அவல நிலை நீடிக்கிறது. இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும் காட்சி பொருளாகவே உள்ளது. குடிநீர் குழாய், அடி குழாய் உள்ளிட்டவையும் துருப்பிடித்து பயனின்றி உள்ளன. வீடுகள் அனைத்தும் கரையான் அரித்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால் கிராமம் முழுவதும் பயனற்று காட்சியளிக்கிறது. இந்நிலையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தினால் மட்டுமே வாடி கிராமம் மீண்டும் புத்துணர்வு பெரும் என்ற கோரிக்கையுடன் வெளியூர் சென்றவர்கள் காத்திருக்கின்றனர்.  

Related Stories: