திருப்பத்தூர் எஸ்பி தலைமையில் ரெய்டு: தமிழக- ஆந்திர எல்லை மலைப்பகுதிகளில் 25 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு; 39 பேர் அதிரடி கைது

திருப்பத்தூர்: திருப்பத்தூர் எஸ்பி தலைமையில் தமிழக- ஆந்திர எல்லை மலைப்பகுதிகளில் நடந்த ரெய்டில் 25 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது. இதுதொடர்பாக 39 பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜவ்வாது மலை, புதூர் நாடு, வாணியம்பாடி அருகே உள்ள தமிழக- ஆந்திர எல்லை பகுதி உள்ள மலைப்பகுதிகளில் சாராயம் காய்ச்சி மாவட்டத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுவதாக எஸ்பி பாலகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் எஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் இரண்டு டிஎஸ்பிக்கள், 4 இன்ஸ்பெக்டர்கள், 30 போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிரடி சாராய வேட்டையில் 3 நாட்களாக களம் இறங்கினர்.

இதில் திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாது மலை புதூர் நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு உள்ளிட்ட மலைப்பகுதிகளில் சமூக விரோத கும்பல் காட்டுப் பகுதிகளில் சாராயம் காய்ச்சி வருவது தெரியவந்து. போலீசார் மூன்று நாட்களாக காட்டுப்பகுதியில் முகாமிட்டு அங்குள்ள சாராய ஊறல்கள் மற்றும் கள்ளச்சாராயம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து அழித்தனர். தொடர்ந்து வாணியம்பாடி அடுத்த மாத கடப்பா மலைப்பகுதி மற்றும் ஆந்திர எல்லை பகுதியான கோரி பள்ளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது ராட்சத பள்ளங்கள் தோண்டி அதில் சாராய ஊறல் போட்டிருப்பது தெரியவந்தது.

ஆந்திர எல்லைப் பகுதிகளிலும் அதிரடி சாராயவேட்டை நடத்தினர். இதில் மொத்தம் சுமார் 25 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்கள் மற்றும் 758 லிட்டர் கள்ளச்சாராயம், 32 லிட்டர் கர்நாடகா வெளி மாநில மதுபாட்டில் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும்  சாராயம் காய்ச்சி காரில் கொண்டு வரும்போது ஒரு காரையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் சாராயம் காய்ச்சி விற்பனை செய்த 46 பேர் மீது வழக்கு பதிவு செய்து 39 பேரை அதிரடியாக கைது செய்து அவர்களை அந்தந்த நீதிமன்றங்களில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தலை மறைவாக உள்ள நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி பாலகிருஷ்ணன் கூறியதாவது: திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு சொட்டு சாராயம் கூட இல்லாத சூழல் ஏற்பட்டு இருந்தது. முற்றிலுமாக சாராயம் ஒழிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆந்திர எல்லை பகுதியான மாத கடப்பா மலை, கோரி பள்ளம், வீரன்னாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாராயம் காய்ச்சப்பட்டு திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு சப்ளை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் இந்த அதிரடி சாராய ஆபரேஷன் தொடங்கப்பட்டு சோதனைகள் கடந்த மூன்று நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் தற்போது 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மீதமுள்ளவர்களை தேடி வருகின்றோம். தொடர்ந்து இந்த கள்ளச்சாராய அதிரடி வேட்டை நாள்தோறும் நடைபெறும். இதற்காக தனி தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது தெரிய வந்தால் உடனடியாக மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவிக்கலாம் புகார் தெரிவிப்பவர்களின் முகவரி ரகசியம் காக்கப்படும் எனவே பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு சொட்டு கள்ளச்சாராயம் இல்லாத மாவட்டமாக மீண்டும் தலை நிமிர்ந்து இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

10 மாதத்தில் 24 பேருக்கு குண்டாஸ்

எஸ்பி பாலாகிருஷ்ணன் கூறுகையில், ‘தொடர்ந்து இதுபோன்ற சமூக விரோத  கும்பல்கள் சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டால் அவர்கள் குண்டர்  சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். இதுவரை மாவட்டத்தில் மட்டும் கடந்த  10 மாத காலத்தில் சாராய வழக்கில் 24 பேர் குண்டர் தடுப்பு காவல்  சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்’ என்றார்.

Related Stories: