மக்களவை தேர்தலை சந்திக்க டிஆர்எஸ்சை தேசிய கட்சியாக மாற்றினார் சந்திரசேகர ராவ்: தெலங்கானாவில் அதிரடி

திருமலை: காங்கிரஸ், பாஜ.வுக்கு மாற்றாக தெலங்கானா ராஷ்டிரிய சமிதி என்ற தனது மாநில கட்சியை தேசிய கட்சியாக சந்திரசேகர ராவ் மாற்றியுள்ளார். தனி தெலங்கானா மாநில கோரிக்கைக்காக, ‘தெலங்கானா ராஷ்டிரிய சமிதி’ என்ற கட்சியை தொடங்கிய சந்திர சேகர ராவ் போராடினார். இதனால், 2014ம் ஆண்டு ஆந்திரா பிரிக்கப்பட்டு, தெலங்கானா தனி மாநிலம் உருவானது. பிறகு, தெலங்கானாவில் நடைபெற்ற  தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றினார். 4 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்த   அவர், ஓராண்டு முன்பாகவே சட்டப்பேரவையை கலைத்து தேர்தலை சந்தித்தார். அதிலும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது.

தொடர்ந்து, அடுத்தாண்டு தெலங்கானா சட்டப்பேரவைக்கு தேர்தல் நடக்கிறது. இதிலும், தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியை பிடிக்க முயற்சிக்கும் சந்திரசேகர ராவுக்கு, பாஜ கடும் சவாலை ஏற்படுத்தி வருகிறது. முதலில் பாஜ.வுடன் நெருக்கமாக இருந்த சந்திரசேகர ராவ், தற்போது அக்கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார். அதோடு, 2024 மக்களவை தேர்தலில் பாஜ.வை தோற்கடிக்க, தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். காங்கிரஸ், பாஜ அல்லாத 3வது அணியை உருவாக்குவதற்காக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உட்பட பல்வேறு கட்சித் தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார்.

இந்நிலையில், தேசிய அரசியலில் ஈடுபடுவதற்காக மாநில கட்சியாக உள்ள தெலங்கானா ராஷ்டிரிய சமிதியை, தேசிய கட்சியாக நேற்று மாற்றினார். ‘தெலங்கானா ராஷ்டிரிய சமிதி’ என்ற கட்சி பெயரை, ‘பாரத் ராஷ்டிரிய சமிதி’ என்று பெயர் மாற்றம் செய்தார். இந்நிகழ்ச்சியில் கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். தனது புதிய தேசிய கட்சிக்கு, ஏற்கனவே தான் பயன்படுத்தி வரும் கார் சின்னத்தையே ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் சந்திரசேகர ராவ் முறையிட்டுள்ளார்.

Related Stories: