வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு: 14 மாவட்டங்களில் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை:  வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்தில் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நேற்று இரவு உருவான காற்றழுத்தம், வலுப்பெற்று நேற்று காலை, காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. இது சென்னை- ஆந்திர கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ளதால், தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டது. அதன்பேரில் வட தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதலே லேசான மழை பெய்தது. சென்னையிலும் நேற்று காலை முதல் மேகமூட்டம் காணப்பட்டது. லேசான மழை பெய்தது. நேற்று இரவில் சில இடங்களில் லேசான மழை பெய்தது.

இது தவிர, கோவை, ஏற்காடு பகுதிகளில் நேற்று அதிகபட்சமாக 30மிமீ மழை பெய்தது. மன்னார்குடி, தேவாலா, நீலகிரி 20மிமீ, கல்லணை, தாளவாடி, பெரிய நாயக்கன் பாளையம், பவானிசாகர், பெரியாறு, ராசிபுரம், நாமக்கல், சங்கரன் கோயில் தூத்துக்குடி 10மிமீ மழை பெய்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக 9ம் தேதி வரை தமிழகத்தில் மழை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.

சென்னையில் மேகமூட்டம் இருக்கும். 9ம் தேதி வரை மழை பெய்யும்.மேலும் புறநகர் பகுதிகள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். மேலும், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், அதை ஒட்டிய மத்திய மேற்கு வ ங்கக் கடல் பகுதிகள், வட தமிழக கடலோரப் பகுதிகள், அதை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கிமீ வேகத்தில் இன்று வீசும். 8ம் தேதியை பொருத்தவரையில் குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள், இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசும். 9ம் தேதி மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய தென் மேற்கு தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசும். அதனால் மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: