×

வழிபாட்டு தலங்கள், மலைகள் இணைப்பு பழனி - கொடைக்கானல் உட்பட 18 இடங்களில் ரோப்கார் திட்டம்: பணியை விரைவில் தொடங்கும் ஒன்றிய அரசு

புதுடெல்லி: தமிழகத்தில் பழனி - கொடைக்கானலை இணைக்கும் வகையில் 12 கிமீ தூரத்துக்கு ரோப்கார் வசதியை ஏற்படுத்துவது உட்பட, நாடு முழுவதும் 18 ரோப்கார் திட்டங்களை அமல்படுத்தும் பணிகளை அடுத்த சில மாதங்களில் ஒன்றிய அரசு தொடங்க உள்ளது. பிரபல வழிபாட்டு தலங்களை இணைக்கவும், சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் மலைகளின் இயற்கை அழகை ரசிக்கவும் ரோப்கார் திட்டங்களை நிறைவேற்றுவதில் ஒன்றிய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்த வகையில், ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் மற்றும் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் 18 ரோப்கார் திட்டங்களை அடுத்த சில மாதங்களில் தொடங்க ஒன்றிய அரசு திட்டமிட்டு உள்ளது. இதில், ஒரு சில பணிகளுக்கான ஒப்பந்தம் ஏற்கனவே வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த திட்டங்களின் மொத்த தூரம் 90 கிமீ.

ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகர் மலை மீது அமைந்துள்ள சங்கராச்சாரியார் மலைக் கோயிலுக்கு செல்லவும், லே - லடாக்கை இணைக்கவும், ஆந்திராவில் கர்னூல் மாவட்டம், ஸ்ரீசைலத்தில் அமைந்துள்ள ஜோதிர்லிங்க கோயிலை இணைக்கும் வகையில் கிருஷ்ணா நதியின் மீது ரோப்கார் அமைக்கும் திட்டங்களும் இதில் அடங்கும். மேலும், மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜைனில் உள்ள மகாகாளீஸ்வரர் கோயிலை இணைக்கவும், திரிபுரா, அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் மாநிலங்களில் இயற்கை அழகை ரசிக்க பல்வேறு மலைகளுக்கு இடையேயும், தமிழகத்தில் பழனி - கொடைக்கானலை இணைக்கும் வகையில் 12 கிமீ தூரத்துக்கும் ரோப்கார் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதேபோல், கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தில் கடாச்சாத்ரி மலையில் 7 கிமீ தூரத்துக்கும், இமாச்சல் மாநிலம், குல்லுவில் உள்ள பிஜ்லி மகாதேவ் கோயிலுக்கு 3 கிமீ தூரம் ரோப்கார் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது.

Tags : Palani ,Kodaikanal ,Union Govt , Ropecar project at 18 places including places of worship, hills link Palani-Kodaikanal: Union Govt to start work soon
× RELATED பழநி மலைக் கோயிலில் தடையை மீறி செல்போனில் பேசிய அண்ணாமலை