சோழவரம் அருகே குட்கா கடத்தி வந்த 5 பேர் கைது: 3 கார், 100 கிலோ பறிமுதல்

புழல்: ஆவடி காவல் ஆணையரகத்தின் சார்பில் போதை இல்லா தமிழகம் என்பதன் தொடர் நடவடிக்கையாக, செங்குன்றம் உதவி ஆணையர் மணிவண்ணன் உத்தரவின்பேரில், நேற்றிரவு சோழவரம் அருகே செம்புலிவரம், செங்காளம்மன் கோயில் எதிரே இன்ஸ்பெக்டர் ஜெகந்நாதன் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வெளிமாநிலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த 3 கார்களை மடக்கி சோதனை செய்தனர்.

அவைகளில், 100 கிலோ குட்கா உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்கள் பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, காரில் இருந்த 5 பேரையும் பிடித்து, சோழவரம் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்தனர். அவர்கள் செங்குன்றம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சந்திராராம் (24), நாராயணலால் (25), ஜெயபால் (39), கணேசன் (45), தங்கமாரியப்பன் (48) என தெரியவந்தது.

இவர்கள் கடந்த சில மாதங்களாக பெங்களூரில் இருந்து குட்கா உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்களை கார்களில் கடத்தி வந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில்லறை விற்பனையில் ஈடுபட்டு வந்திருப்பது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 கார்கள், 100 கிலோ குட்கா போதைபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: