×

சிவசேனா நிறுவனர் பால்தாக்கரே பெயரில் மகாராஷ்டிராவில் 700 சுகாதார மையம்: மும்பையில் மட்டும் 227 அமைக்கப்படுகிறது

மும்பை: சிவசேனா நிறுவனர் பால்தாக்கரே பெயரில் மும்பையில் 227 சுகாதார மையங்கள் உள்பட மாநிலம் முழுவதும் 700 சுகாதார மையங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். மும்பை மாநகராட்சிக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதை பிடிப்பது தொடர்பாக சிவசேனாவின் உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதுதவிர இன்று இரு பிரிவினரும் தசரா பேரணி நடத்துகின்றனர். இந்நிலையில் நேற்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மாநிலம் முழுவதும் 700 மருத்துவமனைகள் சிவசேனா நிறுவனர் பால்தாக்கரே பெயரில் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவதே எனது அரசின் நோக்கம். மேலும்  சுகாதாரத்துறைக்கான பட்ஜெட்டும் இரு மடங்கு ஆக்கப்படும். அப்லா தவகானா எனப்படும் இந்த திட்டம் மூலம் வீடு அருகே மக்களுக்கு மருத்துவ வசதியை செய்து கொடுப்பதே எங்கள் அரசின் நோக்கம். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக மகாத்மா காந்தி பிறந்த நாளான கடந்த 2ம் தேதி 50 சுகாதார மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. பால்தாக்கரே பெயரில் தொடங்கப்படும் 700 சுகாதார மையங்களில் 227 சுகாதார மையங்கள் மும்பையில் அமைக்கப்பட உள்ளது. மாவட்டம் தோறும் மருத்துவ கல்லூரிகள் திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் கிராமப்புற மக்களும் தரமான சிகிச்சை பெற முடியும். அவ்வாறு மருத்துவ கல்லூரிகள் மாவட்டம் தோறும் அமைக்கப்படும் போது ஊரகப்பகுதிகளில் போதுமான டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் இருப்பது உறுதி செய்யப்படும். மாநிலத்தில் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்தும்போது, ஆரம்ப சுகாதார மையங்கள், துணை மருத்துவமனைகள் மற்றும் ஊரக மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ளாட்சி தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளன. இதில், ஷிண்டே அணி மற்றும் உத்தவ் அணி இரு தரப்புமே வெற்றி பெற வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.

ஏனெனில், பால்தாக்கரேயின் கொள்கைகளை பின்பற்றும் தாங்கள்தான் உண்மையான சிவசேனா என ஷிண்டே அணி கூறி வருகிறது. ஆனால், தாங்கள்தான் உண்மையான சிவசேனா எனவும், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாக உள்ள தொண்டர்களும், பாலாசாகேப் தாக்கரேயின் விசுவாசிகளும் எங்களிடம்தான் உள்ளனர் என உத்தவ் தாக்கரே தரப்பினரும் கூறி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், தாங்கள்தான் உண்மையான சிவசேனா என நிரூபிக்கும் நடவடிக்கையாகவே, முதல்வர் ஷிண்டேயின் மேற்கண்ட அறிவிப்பு உள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

பால்தாக்கரேக்கு உரிமை கொண்டாடும் முயற்சியாகவும், அவரது உண்மையான அரசியல் வாரிசு என நிரூபிக்கும் வகையிலும், பால்தாக்கரே விசுவாசிகளை தங்கள் பக்கம் இழுக்கவும் ஷிண்டே தரப்புக்கு இது உதவும் என்று அவர்கள் கருதுகின்றனர். எதிர்வரும் உள்ளாட்சி தேர்தல்களிலும், அந்தேரி கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் ஷிண்டே அணிக்கு வெற்றி வாய்ப்பை உறுதி செய்வதற்கு இத்தகைய நடவடிக்கை உதவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் முதல்வரின் மேற்கண்ட முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Tags : Maharashtra ,Shiv Sena ,Bal Thackeray ,Mumbai , Shiv Sena founder Bal Thackeray to set up 700 health centers in Maharashtra: 227 in Mumbai alone
× RELATED ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானேவை களம் இறக்கியது பா.ஜ