×

களியக்காவிளை அருகே தனியார் பள்ளியில் குளிர்பானத்தில் ஆசிட் கலந்து கொடுத்து 6ம் வகுப்பு மாணவனை கொல்ல முயற்சி? சிறுநீரகம், குடல் பாதிப்பு; சக மாணவனுக்கு வலை

களியக்காவிளை: களியக்காவிளை அருகே குளிர்பானத்தில் ஆசிட் கலந்து கொடுத்து 6ம் வகுப்பு மாணவனை கொல்ல முயற்சி நடந்துள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மெதுகும்மல் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவன், அதங்கோடு தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 24ம்தேதி, இந்த பள்ளியில் காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டது. அன்று பள்ளி முடிந்ததும் சிறுவன் அங்குள்ள கழிவறைக்கு சென்றுள்ளான். அங்கு சீருடையுடன் நின்ற மற்றொரு மாணவன்,  சிறுவனுக்கு  குளிர்பானம் கொடுத்துள்ளான். யார் என தெரியாததால் தனக்கு குளிர்பானம் வேண்டாம் என்று சிறுவன் வாங்க மறுத்துள்ளான். ஆனால், சிறுவனை செல்ல விடாமல் வலுக்கட்டாயமாக அந்த மாணவன் குளிர்பானத்தை குடிக்க செய்துள்ளான். பின்னர் சிறுவன் வீட்டுக்கு வந்து விட்டான்.

மறுநாள் காலை திடீரென காய்ச்சல் வந்தது. அப்பகுதியில் ஏற்கனவே காய்ச்சல் பரவி வருவதால், பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. 2, 3 நாட்களில் காய்ச்சல் அதிகரித்தது. வயிற்று வலி, வாந்தியும் ஏற்பட்டது. ஜீரண கோளாறு, மூச்சு திணறலால் சிறுவன் மிகவும் சிரமப்பட்டு வந்தான். நாக்கு பகுதியும் வெந்தது போல் மாறியது. உடனடியாக நெய்யாற்றின்கரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனுக்கு வயிற்று பகுதியை ஸ்கேன் செய்து பார்த்தபோது தான் வாயில் இருந்து குடல் வரை வெந்திருப்பது தெரிய வந்தது. ஆசிட் போன்று ஏதோ திரவத்தை குடித்ததால் இந்த பாதிப்பு வந்திருக்கலாம் என டாக்டர்கள் கூறினர். மேலும் சிறுநீரகமும் செயல் இழந்த நிலையில் இருந்தது.

அதன் பின்னரே சிறுவன் பள்ளியில் மாணவன் ஒருவன் வலுக்கட்டாயமாக குளிர்பானத்தை குடிக்க வைத்ததை கூறினான். அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பள்ளி நிர்வாகத்துக்கும், களியக்காவிளை காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு விசாரணை நடத்தினர். மேலும் சிறுவனின் தாயார் அளித்த புகாரின் பேரில் இபிகோ 328 மற்றும் இளம்சிறார் பாதுகாப்பு சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். டாக்டர்கள் கூறுகையில், ஸ்லோ பாய்சன் தன்மை கொண்ட அமிலத்தன்மையுடன் கூடிய திரவத்தை கலந்து கொடுத்துள்ளனர். மிகவும் மெதுவாக பாதிப்பு தொடங்கி உள்ளது என்றனர். சிறுவனை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் குளிர்பானத்தில் ஏதாவது கலந்து கொடுத்தார்களா? அல்லது வேறு பிரச்னையா? என விசாரணை நடக்கிறது. குளிர்பானம் கொடுத்த மாணவனை கண்டுபிடித்த பின்னரே இது பற்றிய முழு விவரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags : Kaliakavilai , Trying to kill 6th class student by mixing acid in soft drink in private school near Kaliakavilai? Kidney, intestinal damage; Web to fellow student
× RELATED கட்சி, மதத்தை பார்க்காமல் பா.ஜ விற்கு...