தென்னிந்திய படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன்: சல்மான் கான்

மும்பை: தென்னிந்திய படங்களைத்தான் இந்தியர்கள் கொண்டாடுகிறார்கள். அதனால் தென்னிந்திய படங்களில் நடிக்க விரும்புகிறேன் என சல்மான் கான் கூறினார். சிரஞ்சீவி, நயன்தாரா நடித்துள்ள தெலுங்கு படம் காட்ஃபாதர். மோகன் ராஜா இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் கவுரவ வேடத்தில் சல்மான் கான் நடித்திருக்கிறார். இந்த படம் தமிழ், இந்தி, கன்னடம் மொழிகளிலும் வெளியாக உள்ளது. படத்தின் இந்தி டிரெய்லரை வெளியிடும் விழா மும்பையில் நடைபெற்றது. இதில் சிரஞ்சீவி, ராம்சரண், மோகன் ராஜா ஆகியோருடன் சல்மான் கானும் கலந்துகொண்டார்.

அவர் பேசும்போது, ‘தென்னிந்திய படங்கள் வட இந்தியாவில் ஜோராக ஓடுகிறது. ஆனால், எங்கள் படங்கள் தென்னிந்தியாவில் ஓடுவதில்லை. அதனால்தான் இந்த முறை நானும் ஓடுகிற படத்தில் இருக்கலாம் என்பதற்காக தெலுங்கில் சிரஞ்சீவியுடன் நடித்திருக்கிறேன். தென்னிந்திய படத்தில் நடிப்பது பிடித்திருக்கிறது. தொடர்ந்து இதை செய்யலாம் என நினைக்கிறேன்.

நமது படங்கள் ரூ.300, ரூ.400 கோடிகள் சம்பாதிக்கும் நிலைதான் இப்போது இருக்கிறது. குறிப்பிட்ட சில படங்கள் மட்டும் 1000 கோடி வரை சம்பாதித்துள்ளது. இந்நிலையில் தென்னிந்திய ஸ்டார் நடிகர்களுடன் பாலிவுட் ஸ்டார்களும் இணைந்து நடிக்க வேண்டும்.

தென்னிந்திய, வட இந்திய கலைஞர்கள் ஒன்றாக பணியாற்ற வேண்டும். அப்போது அந்த படம் 3000 கோடி, 4000 கோடி கூட வசூலிக்கும்’ என்றார். சிரஞ்சீவி பேசும்போது, ‘இந்தி படங்கள் இங்கு ஓடாமல் இல்லை. பல இந்தி படங்களை தென்னிந்திய ரசிகர்கள் பெரிய வெற்றியை தேடித் தந்தனர். அந்த படங்களையும் இந்தி பாடல்களையும் தென்னிந்திய ரசிகர்கள் கொண்டாடி உள்ளனர். அதனால்தான் எனது படத்திலும் சல்மான் கானை நடிக்க வைத்திருக்கிறேன்’ என்றார்.

Related Stories: