டெல் அவிவ் ஓபன் டென்னிஸ் ஜோகோவிச் சாம்பியன்: இரட்டையரில் போபன்னா அசத்தல்

டெல் அவிவ்: இஸ்ரேலில் நடந்த டெல் அவிவ் வாட்டர்ஜென் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பிய நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். பைனலில் குரோஷியாவின் மரின் சிலிச்சுடம் மோதிய ஜோகோவிச் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டார். ஜூலையில் நடந்த விம்பிள்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த ஜோகோவிச், அதன் பிறகு களமிறங்கிய இந்த தொடரிலும் ஒரு செட்டில் கூட தோற்காமல் கோப்பையை கைப்பற்றி அசத்தினார். இது அவர் வென்ற 89வது ஏடிபி டூர் வெற்றியாகும். இதன் மூலம் ஜோகோவிச்சுக்கு 250 புள்ளிகள் கிடைத்தாலும் தரவரிசையில் அதே  7 வது இடத்தில் நீடிக்கிறார்.

அதே சமயம் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் ஒரு இடம் முன்னேறி 2வது இடத்தை பிடித்துள்ளார். மற்றொரு ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கரஸ்  தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார்.

இரட்டையர் பிரிவில் நெதர்லாந்தின் மேத்யூ மிடில்கூப்புடன் இணைந்து களமிறங்கிய இந்திய நட்சத்திரம் ரோகன் போபண்னா, பைனலில் 6-2, 6-4 என்ற நேர் செட்களில் மெக்சிகோவின் சான்டியாகோ கோன்சாலஸ் - ஆண்ட்ரெஸ் மோல்டெனி (அர்ஜென்டினா) ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். மிடில்கூப்புடன் இணைந்து போபன்னா வென்ற முதல் ஏடிப் டூர் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: