பார்வையாளர்களை ஈர்க்க நடவடிக்கை மெரினா கடற்கரையில் நவீன வசதிகள்: விரைவில் இலவச வைபை சேவை

சென்னை: விரைவில் அனைத்து தொழில்நுட்ப, நவீன வசதிகள் கொண்ட ஒரு கடற்கரையாக சென்னை மெரினா கடற்கரையை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக முதல்கட்டமாக இலவச வைபை சேவையை விரைவில் அறிமுகப்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னையில் அமைந்துள்ள மெரினா கடற்கரை உலகின் 2வது பெரிய கடற்கரையாகும். சென்னைக்கு வருபவர்கள் கட்டாயம் மெரினா கடற்கரையை பார்க்காமல் செல்ல மாட்டார்கள். அந்த அளவிற்கு பிரபலமான சுற்றுலா தலமாக மெரினா உள்ளது. இங்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக, வார இறுதி நாட்களில் மக்கள் கூட்டம் அலையோதும். இந்த நிலையில் மெரினா கடற்கரை பகுதியை மேம்படுத்தும் வகையில் சென்னை மாவட்ட நிர்வாகம் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், சென்னை மெரினா கடற்கரையில் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தும் கடைக்கார்கள் மற்றும் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதுதொடர்பாக, சுகாதார ஆய்வாளர்கள் தினசரி காலை, மாலை என இரு வேளைகளில் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதேபோல், சென்னை மாநகரை சிங்கார சென்னையாக மாற்றும் வகையில் பூங்கா, செயற்கை நீரூற்று உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. வெளி நாட்டு பயணிகள் மட்டுமின்றி பிற மாநில சுற்றுலாவாசிகளை கவரும் வகையில் இந்த பணி நடக்கிறது. அதன் ஒரு பகுதியாக மெரினா கடற்கரையும் அழகுபடுத்தப்பட்டு வருகிறது. அங்குள்ள கடைகள்  ஒழுங்குபடுத்தப்பட்டு வருகிறது. வியாபாரிகளுக்கு மாநகராட்சி சார்பில் விரைவில் ஸ்மார்ட் கடைகள் வழங்கப்பட உள்ளது.

தினமும் மெரினாவிற்கு வரும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு தேவையான அடிப்படையான வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, பூங்கா, நவீன இருக்கைகள், கழிவறை வசதி உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. அதன்ஒரு பகுதியாக மெரினா கடற்கரையில் இலவச வைபை வசதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளிலும் வைபை வசதி கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் சுற்றுலாத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளது. அதனை தொடர்ந்து வைபை சேவை வழங்கும் நிறுவன அதிகாரிகளுடன் கடந்த 27ம் தேதி இணைய சேவை வழங்குவதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையில், வைபை வழங்கும் நிறுவனம் உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகளை மாநகராட்சி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தில் மெரினா மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: மெரினா கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இலவசமாக வைபை வசதி அளிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மெரினாவிற்கு வரும் பார்வையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் இவ்வசதியை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோருடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். ஒருமுறை பாஸ்வேர்டு மூலம் 45 நிமிடங்கள் இலவசமாக வைபை வசதி வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஆசியாவிலேயே 2வது பெரிய கடற்கரையாக மெரினா இருப்பதால் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இலவச வைபை திட்டத்தை குறைந்த செலவில் செயல்படுத்துவதற்கான கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுற்றுலா துறையுடன் இணைந்து பொதுமக்களுக்கு இலவச இணையதள சேவை வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக மெரினாவில் 5 இடங்களில் இலவச வைபை வசதி நிறுவப்படவுள்ளது. வைபை வழங்கும் நிறுவனம் அதற்கான உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகளை மாநகராட்சி வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் மெரினா மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

*என்னென்ன வசதிகள்?

மெரினா கடற்கரைக்கு வருகை தரும் பார்வையாளர்கள் அனைவருக்கும் இணைய வசதி வழங்கும் வைபை சேவை, கடல் காட்சி அறை, முதல் உதவி செய்யும் வகையிலான பிரத்யேக இட வசதி, மின் கழிப்பறைகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் போன்ற நவீன வசதிகளைச் செய்து தரத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒன்றிய சுற்றுலாத்துறை அமைச்சகத்துடன் இணைந்து இந்த திட்டங்களை சென்னை மாநகராட்சி செயல்படுத்த இருக்கிறது. ஒன்றிய அரசின் ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் இந்த வசதிகள் செய்து தரப்பட இருக்கின்றன.

*பல்வேறு பகுதிகளில்...

ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் சென்னை மெரினா, பெசன்ட் நகர், மாமல்லபுரம், ராமேஸ்வரம், மணப்பாடு, கன்னியாகுமரி, மணிகுடி மற்றும் தெக்குறிச்சி ஆகிய கடற்கரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மெரினாவை தொடர்ந்து மற்ற கடற்கரைகளில் இந்தத் திட்டம் செயல் வடிவம் கொள்ளவிருக்கிறது.

Related Stories: