×

சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் பருவ மழையை எதிர்கொள்ள முன்னேற்பாடு பணிகள் தீவிரம்: மேயர் பிரியா தகவல்

தண்டையார்பேட்டை: சென்னை துறைமுகம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம், அமைச்சர் சேகர்பாபு தலைமையில், ராயபுரம் மண்டல அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சென்னை வடக்கு மண்டல துணை ஆணையர் சிவகுரு பிரபாகர், மண்டல குழு தலைவர் ஸ்ரீராமுலு ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் மேயர் பிரியா நிருபர்களிடம் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், முன்னெச்சரிக்கை பணிகளை எப்படி மேற்கொள்ள வேண்டும், என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மழைநீர் வடிகால் பணிகளை வரும் 10ம் தேதிக்குள் முடிக்க வேண்டும், வேலை நடைபெறும் இடங்களில் பேரிகார்டு அமைக்க வேண்டும், பொதுமக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.

பொதுப்பணித்துறை சார்பில் நடைபெறும் வடிகால் பணிகள் வரும் 7ம் தேதிக்குள் முடிக்கப்படும். பக்கிங்காம் கால்வாய்களில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மின்சாரம் துண்டிக்கப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த ஆண்டுகளில் எந்த இடங்களில் மழைநீர் தேங்கியதோ அந்த இடங்கள் எல்லாம் கண்காணித்து மழைநீர் தேங்காத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனைமீறி மழைநீர் தேங்கினால் மோட்டார்கள் வைத்து தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தண்ணீர் தேங்கும் இடங்கள் கணக்கெடுக்கப்பட்டு பணிகள் நிறைவு பெறாத இடத்தில் பாதிக்கப்படும் மக்களுக்கும் உணவுகள் வழங்குவதற்கும் ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், மக்களுக்காக மருத்துவ முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் கலந்தாய்வு கூட்டம் மேற்கொள்ளப்படும். வரும் 15ம் தேதிக்குள் மழை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளன. அதற்குள் ஒவ்வொரு தொகுதியிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: கழிவுநீர் மற்றும் மழைநீர் கால்வாய் பணிகளால் மக்கள் சிரமப்பட்டாலும், அடுத்து 20 ஆண்டு காலத்திற்கு எந்த  பிரச்னையும் இன்றி இருக்கலாம். போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. சுதந்திரத்திற்கு முன், பின் என்று கணக்கெடுத்துக் கொண்டால் கூட இவ்வளவு அதிக பணிகள் மேற்கொள்ளப்படுவது இதுதான் முதல் முறை. உதாரணத்திற்கு 1,600 கிலோ மீட்டர் அளவிற்கு இன்றைக்கு மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறுகிறது.

இதேபோல், மின்வாரியம் சார்பில், பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.  50 ஆண்டு 60 ஆண்டுகளுக்கு முன்பு பதிக்கப்பட்ட கழிவுநீர் குழாய்கள் 4 இன்ச் அளவு இருந்ததை மாற்றி 9 இன்ச் 10 இன்ச் என மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. குடிநீர் பற்றாக்குறை இருக்கின்ற இடங்களில் அதிக அளவு விட்டம் கொண்ட குழாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
மாநகராட்சியில் 2.0 திட்டத்தின்படி 2500 பணிகள் நடைபெறுகிறது. பருவமழை வந்தால் மக்களுக்கு எப்படி பாதிப்புகள் ஏற்படும் என்பதை கணக்கிட்டு அதற்கு நிவாரணமாக என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Chennai Corporation ,Mayor ,Priya , All the zones of the Chennai Corporation are intensifying their preparations to deal with the monsoon rains: Mayor Priya informs
× RELATED சென்னை மாநகராட்சி வருவாய்த்துறை...