குழந்தை பிறந்த 10 நாளில் மீண்டும் பணிகளை துவங்கிய தாம்பரம் மேயர்: பொதுமக்கள் வரவேற்பு

தாம்பரம்: தாம்பரம் - திருநீர்மலை சாலையில் உள்ள கடப்பேரி பகுதியை சேர்ந்தவர் கமலக்கண்ணன். தாம்பரம் பழைய 1வது வட்ட திமுக செயலாளர்.  இவரது மகள் வசந்தகுமாரி (26). பி.டெக் கெமிக்கல் இன்ஜினியர் பட்டதாரி. கடந்த 2020ம் ஆண்டு, நவம்பர் மாதம், 4ம்தேதி கோகுல் செல்வன் - வசந்தகுமாரி கமலக்கண்ணன் ஆகியோருக்கு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், திமுக ஆட்சி அமைந்தவுடன் தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல், செம்பாக்கம் ஆகிய நகராட்சிகளும் பெருங்களத்தூர், பீர்க்கன்கரணை, மாடம்பாக்கம், சிட்லபாக்கம், திருநீர்மலை ஆகிய பேரூராட்சிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு புதிதாக தாம்பரம் மாநகராட்சி தமிழகத்தின் 20வது மாநகராட்சியாக உருவாக்கப்பட்டது.

இதில், 32வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு வசந்தகுமாரி கமலக்கண்ணன் போட்டியிட்டு வெற்றி பெற்று தாம்பரம் மாநகராட்சியின் முதல் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பான முறையில் பணி செய்து வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் 12ம் தேதி மேயருக்கு சீமந்தம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்த மறுநாளே நிறை மாத கர்ப்பிணி என்று பாராமல் தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை நேரில் சென்று ஆய்வு செய்தது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் 22ம்தேதி அதிகாலை சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், மக்கள் பணிகளை கவனிக்கும் வகையில், குழந்தை பிறந்த 10 நாட்களில் மீண்டும் நேற்று காலை மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து தனது பணிகளை தொடங்கினார்.

Related Stories: