வடபழனி முருகன் கோயிலில் நவராத்திரி விழா கோலாகலம்: இன்றுடன் நிறைவடைகிறது

சென்னை: நவராத்திரி விழாவை முன்னிட்டு வடபழனி முருகன் கோயிலில் கொலு அமைக்கப்பட்டு கோலாகலமாக நடைபெற்ற நவராத்திரி விழா இன்றுடன் நிறைவடைகிறது. சென்னையில் பிரபலமான கோயில்களில் வடபழனி முருகன் கோயிலும் ஒன்று. இந்த கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு கடந்த 26ம் தேதி ெகாலு விழா தொடங்கியது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் ‘சக்தி கொலு’ என்ற பெயரில் 9 படிகள் கொண்ட பிரமாண்ட கொலு வைக்கப்பட்டு  உள்ளது.

துவக்க விழாவில், பிரபல கர்நாடக இசைப்பாடகி சுதா ரகுநாதன், கோயில் தக்கார் ஆதிமூலம், துணை கமிஷனர் முல்லை மற்றும் பொதுமக்கள் சார்பில் குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இசை கச்சேரிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர்.

தினமும் அனைத்து பக்தர்களுக்கும் 108 முருகன் கோயில் விவரம் அடங்கிய புத்தகம் அம்மன் கோயில்கள் விவரம் அடங்கிய புத்தகம், முருகர் படம், அம்மன் படம், விபூதி, குங்குமம் என அனைத்தும் வைத்து முதலில் வரும் 250 நபர்களுக்கு கொலு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நவராத்திரி கொலுவின் முக்கிய அம்சமாக கையினால் தயாரிக்கப்பட்ட பொம்மைகள், கந்த புராணம் வரலாறு, கீதா உபதேச காட்சி, சீதா கல்யாணம், தரவுபதி சம்ரோக்ஷணம், காமாட்சியம்மன் ஊஞ்சல், நவ துர்கை அம்மன், அறுபடை வீடு முருகன் என அனைத்தும் கொலுவின் முக்கிய அம்சமாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள முக்கியமான சக்தி பீடங்களில் சில புகைப்படங்களை இங்கே கொலுவில் புகைப்பட தொகுப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த சக்தி கொலுவில் எங்கும் இல்லாத வகையில் ஒவ்வொரு பொம்மைகளின் காட்சிகளை பற்றிய விளக்கங்கள் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

இந்து மதத்தின் வழக்கங்கள், கடவுள் உருவங்கள் பல ரூபங்களில் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அவற்றை முழுமையாக யாராலும் எளிதில் அறிந்து கொள்ள முடியாது. அதனை பொதுமக்களுக்கு எடுத்து சொல்லும் விதத்தில் ஏராளமான தகவல்கள் சக்தி கொலுவில் ஆங்காங்கே எழுதி வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் அதில் எழுதப்பட்ட தகவல்களை படித்து அதனை பற்றி தெரிந்துகொள்ள உதவியாக உள்ளது. மேலும், அனைவரும் எளிதாக தெரிந்துகொள்ள சில அரிதான காட்சி பொம்மைகள் எந்த வரிசையில் எந்த படியில் இருக்கிறது என்ற விவரம், தமிழக முருகன் கோயில்களின் விவரமும் தனித்தகவலாக இங்கு வைக்கப்பட்டுள்ளது.

நவராத்திரி விழாவில் தினமும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை, 108 நபர்கள் கொண்ட குழுவினரால் லலிதா சகஸ்ரநாம பாராயணம் நடத்தப்படுகிறது. மாலை 5:30 மணி முதல் மாலை 6 மணிவரை வேத பாராயணம், ஸ்ரீ ருத்ரம், சமஹம், ஸ்ரீ சுக்தம் நடக்கிறது. காலை 11 மணி முதல் 11:30 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 6:30 மணி வரையிலும் சிறப்பு பூஜை, தீபாராதனை நடத்தப்படுகிறது. மாலை 6:30 மணி முதல் 7 மணிவரை சிறப்பு குழுவினரின் கொலு பாட்டு நடக்கிறது. இரவு 7 மணிக்கு இசைக் கச்சேரி, நாமசங்கீர்த்தனம், சொற்பொழிவு நடக்கிறது. கோலாகலமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சி இன்றுடன் நிறைவடைகிறது.

Related Stories: