×

தெருவில் நிம்மதியாக நடக்க கூட முடியல... தெரு நாய்களுடன் மல்லுக்கட்டும் சென்னைவாசிகள்: சட்ட திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

பெரம்பூர்: நாய்கள் நன்றி உள்ள பிராணி. பழங்காலம் தொட்டு தற்போது வரை மனிதர்களோடு ஒன்றாக வாழக்கூடிய பிராணிகளில் நாய்களும் ஒன்று. வீட்டில் வளர்க்கும் நாய்கள் முறையாக பராமரிக்கப்பட்டு தடுப்பூசிகள் போடப்பட்டு கண்காணித்து வருகின்றன. கணவனுக்கு சாப்பாடு தர மறந்த மனைவிகள் கூட உண்டு. ஆனால் வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு நேரம் தவறாமல் சாப்பாடு தரும் பெண்கள் இன்னமும் இருந்து கொண்டுதான் உள்ளனர். அந்த அளவிற்கு வீட்டில் உள்ள நபர்களோடு நாய்கள் ஒன்றி விடுகின்றன. வீட்டில் வளர்க்கும் நாய்களைத் தவிர்த்து தெரு நாய்கள் தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ளும் வகையில் குறிப்பிட்ட ஏரியாக்களை வரையறை செய்து வாழ்ந்து வருகின்றன. ஒரு ஏரியாவில் இருந்து மற்றொரு ஏரியாவுக்கு சென்றால் ஏரியா பிரச்னை ஏற்பட்டு மற்ற நாய்கள் குறிப்பிட்ட ஏரியாவுக்கு வந்த புது நாயை தாக்கும் அந்த அளவிற்கு தங்களது ஏரியாவை வரையறுத்து சென்னையில் நாய்கள் வாழ்ந்து வருகின்றன.

குறிப்பிட்ட தெருக்களில் வாழும் நாய்களுக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள், காலையில் வாக்கிங் செல்லும் நபர்கள் மற்றும் வீடுகளில் உள்ள பெண்கள் தினம்தோறும் உணவு அளித்து அதனை பாதுகாத்து வருகின்றனர். நிலைமை இவ்வாறு சென்று கொண்டிருக்க சமீப காலமாக சென்னையில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து அதனால் ஏற்படும் பிரச்னைகளும் அதிகரித்து வருகின்றன. 1960ல் உருவாக்கப்பட்ட விலங்குகள் வதை தடுப்பு சட்டம் மாற்றியமைக்கப்பட்டு 2001ல் முற்றிலும் நாய்களுக்கு பாதுகாப்பாக அந்த சட்டம் மாற்றியமைக்கப்பட்டது. 1960ல் உருவாக்கப்பட்ட சட்டம் நாய்களை கொல்லலாம் என கூறுகிறது. ஆனால் 2001ல் ஏற்படுத்தப்பட்ட சட்டம்  தெரு நாய்களை கொல்லக்கூடாது என்றும், கருத்தடை செய்யப்பட்டு மீண்டும் அந்த தெரு நாய்கள் எந்த இடத்தில் வாழ்ந்தனவோ அதே இடத்தில் மீண்டும் கொண்டு போய் விட வேண்டும் என சொல்கிறது.

அப்படி விடப்படும் தெரு நாய்களால் பொதுமக்களுக்கு மீண்டும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. ரேபிஸ் கிருமியினால் பாதிக்கப்பட்ட  வெறி பிடித்த நாய்களால் மட்டுமே பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும், அதுபோன்ற நாய்களை கண்டால் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் பிடித்து தனியாக கூண்டில் அடைத்து விடுவார்கள். தினமும் விலங்குகள் நல ஆர்வலர்கள் குறிப்பிட்ட கூண்டில் அடைக்கப்பட்ட நாய்களை வந்து பார்த்து அவை உயிரோடு இருக்கின்றதா என்பதை கவனித்து செல்கின்றனர். இயற்கையான மரணம் நிகழும் வரை குறிப்பிட்ட வெறிநாய்களுக்கு தினம் உணவு அளித்து அதை பராமரிப்பது மாநகராட்சி ஊழியர்களின் வேலையாக உள்ளது. வெறி பிடித்த நாய்கள் மனிதர்களை கடிக்கும் போது அவற்றை எளிதாக கண்டறிந்து மாநகராட்சிக்கு தெரிவித்து அதனை பொதுமக்கள் பிடித்துக் கொடுத்து விடுகின்றனர்.

ஆனால் சாலையில் செல்லும் போது ஒருவரை நாய் கடித்து விட்டால் அவர் அடுத்த நிமிடம் மருத்துவமனைக்கு சென்று ஊசி போட்டுக் கொண்டு, அதன் பிறகு  குறிப்பிட்ட அந்த நாயை பற்றி யோசிப்பார். மீண்டும் திரும்பி அங்கு வந்து பார்த்தால் அந்த நாய் இருக்குமா, இல்லையா என்பது தெரியாது. தற்போது பெரும்பாலான சாலைகளில் இந்த நிலை தொடர்ந்து வருகிறது. காலையில் வாக்கிங் செல்பவர்கள் முதல் இரவு தாமதமாக வீட்டிற்கு செல்வார்கள் வரை தெருநாய் தொல்லையால் அவதிப்படுகின்றனர். குறிப்பிட்ட தெருக்களில் நாய் அதிகம் இருப்பதால் அந்த தெரு வழியாக செல்லாமல் வேறு தெருவின் வழியாக செல்லும் நிலை உள்ளது. சென்னையில் சமீபத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், அவை பொதுமக்களுக்கு தொல்லை தருவதாகவும் தினமும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து நடவடிக்கை  எடுக்கும்  மாநகராட்சி ஊழியர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று தெரு நாய்களை பிடிக்கின்றனர்.

அதில், எத்தனை நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்யவில்லையோ அதனை பிடித்து ஆபரேஷன் செய்து 2 ஒரு நாளில் மீண்டும் அதே இடத்திற்கு கொண்டு சென்று விடுகின்றனர். மீண்டும் அவை தங்களுக்கு இடையூறாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பெரம்பூர் பகுதியை சேர்ந்த நந்தகுமார் கூறுகையில், ‘‘தினமும் அதிகாலை 5 மணிக்கு வாக்கிங் செல்பவர்களை தெருநாய்கள் விரட்டுவதால், பாதியில் திரும்புகின்றனர். சிலரை இந்த நாய்கள் கடிப்பதால், வக்கிங் வருவதை தவிர்க்கின்றனர். இதேபோல், இரவு 11 மணிக்கு மேல் தெரு நாய்கள் கூட்டமாக கூடி அடிக்கடி சண்டையிட்டு கத்திக் கொண்டே உள்ளது. இதுகுறித்து மாநகராட்சியில் புகார் அளித்தால், தெருநாய்களை பிடித்து சென்று, கொல்வதற்கு சட்டத்தில் இடம் இல்லை, என்கின்றனர். இதனால், நாளுக்கு நாள் மக்கள் பாதித்து வருகின்றனர். இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘நாய்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து தெளிவாக சட்டம் எழுதப்பட்டுள்ளது. மேலும் உயர் நீதிமன்றத்தில் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் இது குறித்து பல்வேறு வழக்குகள் கையாளப்பட்டுள்ளன. எனவே வெறிநாய் எனப்படும் ரேபிஸ் தொற்று உள்ள நாய்களைப் பிடித்தால் அவற்றை நாங்கள் கூண்டில் அடைகின்றோம். மற்றபடி தெருக்களில் உள்ள நாய்களைப் பிடித்து கருத்தடை செய்து மீண்டும் அதே இடத்தில் விட்டு விடுகின்றோம். ஏனென்றால்  நாய்களின் வாழ்வாதாரம் பாதிக்கக் கூடாது என்பதால் சட்டம் என்ன சொல்கிறதோ அதை செய்கின்றோம். மேலும் நாய் பிறந்து 7 மாதம் முதல் ஒரு வருடம் வரை கருத்தடை செய்வது கிடையாது. நாங்கள் தெருக்களில் பிடிக்கும் நாய்களை எவ்வாறு கையாளுகிறோம் என்பதை கவனிக்க விலங்குகள் நல ஆர்வலர்கள், ப்ளூ கிராஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தினம்தோறும் வந்து பார்த்து செல்கின்றனர். இதனால் சட்டத்தை மீறி நாங்கள் எதுவும் செய்ய முடியாது,’’ என்றார்.

நாய்கள் வீட்டிற்கு பாதுகாப்பாக உள்ளதாகவும், நன்றி உணர்வுடன் உள்ளதாகவும் பலரும் தெரிவிக்கின்றனர். இதில் எந்த மாறுபட்ட கருத்தும் கிடையாது. அதே நேரத்தில் மனிதர்களே பல நேரத்தில் தன்னிலை மருந்து அபாயகரமாக மாறும் சூழலை ஏற்படுகிறது. அந்த வகையில் விளக்குகளும் விதிவிலக்கல்ல. எனவே நாய்கள் விவகாரத்தில் விலங்குகள் நல ஆர்வலர்களின் சம்மதத்தோடு புதிய முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே தினம்தோறும் நாய்களால் பாதிக்கப்படும் சென்னை வாசிகளின் கோரிக்கையாக உள்ளது.

* வண்டிகள், ஆட்கள் குறைவு
சென்னையில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உள்ளன. இவற்றை பராமரிப்பதற்கும், பிடிப்பதற்கும் சென்னை மாநகராட்சியில் போதிய ஆட்கள் இல்லை என கூறப்படுகிறது. மேலும் மண்டலத்திற்கு ஒரு தெரு நாய் வண்டி மட்டுமே உள்ளதாகவும் அதனை வைத்துக்கொண்டு நாய்களை பிடிக்க வேண்டும், பிடிக்கும் நாய்களை மீண்டும் அதே இடத்தில் கொண்டு வந்து விட வேண்டும் என அனைத்து பணிகளையும் செய்ய வேண்டிய நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே தெரு நாய்கள் விஷயத்தில் கூடுதல் பணியாட்களை நியமித்து கூடுதல் வண்டிகளை இயக்க வேண்டும் என சென்னை வாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

* எஸ்எம்எஸ் மட்டும்தான் வருது
தெரு நாய்கள் தொல்லை தொடர்பாக பொதுமக்கள் 1913 என்ற எண்ணிற்கு புகார் அளிக்கின்றனர். புகார் அளித்தவுடன் உங்களது புகார் ஏற்றுக் கொள்ளப்பட்டது என எஸ்எம்எஸ் வருகிறது. அடுத்த 2 நாட்கள் கழித்து உங்களது புகார் தீர்க்கப்பட்டது என எஸ்எம்எஸ் வருகிறது. ஆனால் சம்பந்தப்பட்ட ஏரியாவில் நாய்களை யாரும் வந்து பிடிக்கவில்லை எனவும், எஸ்எம்எஸ் மட்டும் 2 நாள் இடைவெளியில் சரியாக வருவதாகவும் ஆன்லைன் மூலமாக புகார் அளிப்பவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

* சவாலாக உள்ளது
தெரு நாய்களை கட்டுப்படுத்துவது மாநகராச்சிக்கு சவாலான ஒன்று. 20, 30 வருடங்களுக்கு முன்பு பிடிக்கப்படும் நாய்கள் கொல்லப்பட்டன. ஆனால் தற்போது இல்லை. பிடிக்கப்படும் நாய்கள் கருத்தடை செய்யப்பட்டு மீண்டும் அதே இடத்தில் விடப்படுகிறது. ரேபிஸ் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்படுள்ளது, என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Tags : Chennai , Can't even walk in the street in peace... Let the stray dogs wrestle: Residents of Chennai urge to take action to amend the law
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...