×

தூத்துக்குடிக்கு மாற்றியதை எதிர்த்து ரைட்டர் வழக்கு கர்மாவின் கொள்கைப்படி நிவாரணம் வழங்குவதாக ஐகோர்ட் நீதிபதி கருத்து: மதுரையில் போக்குவரத்து காவலராக மாற்றம் செய்ய உத்தரவு

மதுரை: தூத்துக்குடிக்கு இடமாற்றம் செய்ததை எதிர்த்து ரைட்டர் தொடர்ந்த வழக்கில், கர்மாவின் கொள்கைப்படி நிவாரணம் வழங்குவதாக கூறியுள்ள நீதிபதி, மதுரை மாவட்டத்தில் போக்குவரத்து காவலராக மாற்ற உத்தரவிட்டுள்ளார்.
 மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் ரைட்டராக பணியாற்றிய ஸ்ரீமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘இரண்டாம் நிலை காவலராக 2003ல் சேர்ந்தேன். 2011ல் ஏற்பட்ட விபத்தில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்றேன். தொடர்ந்து தலைசுற்றல் மற்றும் ஒற்றைத் தலைவலி அதிகமாக இருந்ததால், அடிக்கடி மருத்துவ விடுப்பு எடுத்தேன். எனக்கு 13 குற்றச்சாட்டு குறிப்பாணைகள், தண்டனைகள் வழங்கப்பட்டன.

இதை எதிர்த்த வழக்கில், தண்டனையை ரத்து செய்த நீதிமன்றம், குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு உத்தரவிட்டது. தற்போது என்னை தூத்துக்குடிக்கு மாற்றம் செய்துள்ளனர். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்தார். மனுதாரர் வக்கீல் நிரஞ்ஜன்குமார் ஆஜராகி, ‘‘விதிகளை மீறி 150 கி.மீ தூரத்திற்கு இடமாற்றம் செய்துள்ளனர். அதிகாரிகள் சிலரது தவறான நடவடிக்கைகளுக்கு மனுதாரர் உடன்படவில்லை. முந்தைய தண்டனைகளால் மற்றவர்களை விட குறைவான சம்பளமே வழங்கப்படுகிறது. பள்ளி செல்லும் குழந்தைகள் உள்ளனர். நிர்வாக காரணம் எனக் கூறினாலும், தண்டனை வழங்கும் வகையிலேயே இடமாற்றம் செய்துள்ளனர்’’ என்றார்.

கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன், அரசு சிறப்பு பிளீடர் பர்ஷானா கவுசியா ஆஜராகி, ‘‘மனுதாரரின் செயல் ஒழுங்கீனமானது. தனக்கான தண்டனையை எதிர்த்து நிர்வாகரீதியாக அப்பீல் செய்யாமல், நேரடியாக நீதிமன்றத்தை நாடியுள்ளார். பணியில் இருந்து கொண்டே அதிகாரிகளுக்கு எதிராக தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்துகிறார்.  இடமாறுதல் உத்தரவை பெறாமல் விடுப்பில் சென்றதால், விஏஓ முன்னிலையில் நோட்டீஸ் வீட்டில் ஒட்டப்பட்டது. 10 மாதங்களில் நிர்வாக காரணங்களுக்காக 12 போலீசார் வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மனுதாரர் தாக்கல் செய்துள்ள இடமாறுதல் உத்தரவும், துணை கமிஷனரின் கையெழுத்தும் போலியானது. குறிப்பிட்ட ேததியில் துணை கமிஷனர் செஸ் ஒலிம்பியாட் பாதுகாப்பு பணியில் இருந்தார்’’ என்றனர்.

இதையடுத்து நீதிபதி, ‘‘சீருடைப் பணியில் இடமாற்றம் என்பது தற்செயலானது. ஆனால், மனுதாரருக்கு வழங்கப்பட்ட இடமாறுதல் என்பது தண்டனையைப் போல உள்ளது. மற்றவர்களைவிட குறைவான சம்பளம் பெறுவதே ஒருவகையான தண்டனை தான். கர்மாவின் கொள்கைகள் மூலம் மனுதாரருக்கு நிவாரணம் தர இந்த நீதிமன்றம் விரும்புகிறது. கர்மாவின் கொள்கைளில் சஞ்சித கர்மா (முழு கர்மா) மற்றும் பிராராப்த கர்மா (பகுதி கர்மா) என இருவகை உள்ளது. பிராராப்த கர்மாவே மனுதாரருக்கு உரியது. பல தண்டனைகளையும், இடமாறுதலையும், நிதி சார்ந்த பிரச்னைகளையும் சந்தித்துள்ளார். எனவே, மனுதாரரை மதுரை மாவட்டத்திற்கு போக்குவரத்து காவலராக மாற்றம் செய்ய வேண்டும். மனுதாரர், ஆர்டிஐ மனுக்கள் தாக்கல் செய்யாமல், தனது காவலர் பணியை மட்டும் தொடர வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.


Tags : ICourt ,Thoothukudi ,Karma ,Madurai , Reiter's case against transfer to Thoothukudi: Court judge gives relief as per principle of karma: Order to transfer to traffic police in Madurai
× RELATED 2021-ல் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில்...