×

ஆக்கிரமிப்புகளை அகற்றி வைகையாற்றின் கரையோரங்களில் சாலை-பொதுமக்கள் எதிர்பார்ப்பு

மானாமதுரை : மானாமதுரை அருகே பனிக்கனேந்தல் கிராமத்திற்கும் ஆதனூர் இடையே உள்ள வைகை ஆற்றில் மண் அரிப்பைத் தடுக்கவும் குடிநீர் திட்டங்களுக்கு நிலத்தடிநீர் ஆதாரத்தை பெருக்கவும் ரூ.16 கோடியில் தடுப்பணை கட்டும் பணி கடந்த 2012ம் ஆண்டு நடந்தது. தடுப்பணையில் தண்ணீர் தேங்கும் போதும் வெள்ள காலங்களில் ஆற்று நீர் கரையோர குடியிருப்புகளை அடித்து செல்லாமல் இருக்கவும் தடுப்பணையின் இருபுறமும் கரைகள் அமைக்கப்பட்டன.இதையடுத்து மானாமதுரை நகருக்குள் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இருகரைகளிலும் போக்குவரத்திற்காக அணுகு சாலையும் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதன்படி தடுப்பணையில் இருந்து மதுரை-ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் உள்ள தல்லாகுளம் பகுதி வரையும், எதிர்ப்புறம் உள்ள பேரூராட்சி அலுவலகம் அருகே சோணையா கோயில் பகுதியில் இருந்து பனிக்கனேந்தல் தடுப்பணை வரை 2,480 மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு வருவாய்த் துறை மூலம் வைகையாற்றின் கரைகளில் சர்வே செய்யும் பணி நடந்தது.அதன்பின் அப்பணி கிடப்பில் போடப்பட்டது. இது தவிர ஆற்றுக்குள் திறந்துவிடப்படும் கழிவுநீரை தடுப்பணைக்கு வெளியே கொண்டு செல்லவும் பேரூராட்சி மண்டல இயக்குநர், சுற்றுச்சூழல் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் தங்கள் பங்கிற்கு ஆய்வுகள் செய்தனர். இவ்வாறு வைகை ஆற்றை பாதுகாக்கவும், நகருக்குள் ஏற்படும் நெரிசலை தவிர்க்கவும் கரையோரங்களில் சாலை அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டதால் நகருக்குள் நெரிசல் அதிகரித்து வருகிறது.மதிமுக நகர செயலாளர் அசோக் கூறுகையில், மானாமதுரை உச்சமாகாளியம்மன் கோயில் முதல் பழைய பஸ்ஸ்டாண்டு ரயில்வேகேட் வரை சாலை குறுகலாக இருப்பதால் தினமும் பீக் அவர் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வயதானோர், நோயாளிகள் அவதிப்படுகின்றனர். வைகை ஆற்றில் தடுப்பணை கட்டப்பட்டபின் ஆற்றின் இருபுறமும் கரைகள் அமைக்கப்பட்டன. இக்கரைகளை அகலப்படுத்தி அதன்மீது மதுரையில் இருப்பது போல சாலை அமைத்தால் தெற்கு ரதவீதி முதல் பழைய பஸ் ஸ்டாண்ட் வரை ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறையும், பழைய பஸ் ஸ்டாண்டு வழியாக மீண்டும் டவுன் பஸ்களை இயக்க முடியும். எனவே கிடப்பில் போடப்பட்ட சாலை அமைக்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்….

The post ஆக்கிரமிப்புகளை அகற்றி வைகையாற்றின் கரையோரங்களில் சாலை-பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Vaigayadu ,Manamadurai ,Vaigai River ,Panicananental village ,Adhanur ,Vaigaad ,
× RELATED மானாமதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி இறங்கினார் வீரஅழகர்