×

கும்மிடிப்பூண்டி அருகே அரசு நிலத்தில் கட்டப்பட்ட தடுப்பு சுவர்கள் இடித்து அகற்றம்: வட்டாட்சியர் நடவடிக்கை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே ஆதிதிராவிட மக்களின் அன்றாட தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுவதாக வந்த புகாரின்பேரில், இன்று காலை அரசு நிலத்தை சுற்றி கட்டியிருந்த தடுப்பு சுவரை இடித்து அகற்றும் பணி நடைபெற்றது. இதற்கான நடவடிக்கைகளை வட்டாட்சியர் மேற்கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் அடுத்த தோக்கமூர் கிராமத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்கள் ஆடு-மாடு மேய்த்தல் மற்றும் கூலிவேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். இக்கிராமத்தை ஒட்டியுள்ள திரவுபதி அம்மன் ஆலயத்தின் அருகே அரசுக்கு சொந்தமான 55 ஏக்கர் நிலத்தில் ஏற்கெனவே கடந்த பல ஆண்டுகளுக்கு முன் தடுப்பு சுவர் கட்டப்பட்டு இருந்தது.

இந்த தடுப்பு சுவரினால் தங்களின் அன்றாட கால்நடை மேய்த்தல் மற்றும் கூலி வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இந்த தடுப்பு சுவரை இடித்து அகற்ற வேண்டும் என கும்மிடிப்பூண்டி வட்டாட்சியரிடம் பலமுறை ஆதிதிராவிடர் மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை 5 ஜெசிபி இயந்திரங்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட போலீசாருடன் வட்டாட்சியர் கண்ணன் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அங்கு மக்களை பாதிக்கும் வகையில், அரசுக்கு சொந்தமான நிலத்தில் இருந்த தடுப்பு சுவர்களை இடிக்கும் பணி நடைபெற்றது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதைத் தொடர்ந்து மாவட்ட எஸ்பி செபாஸ் கல்யாண் உத்தரவின்பேரில், டிஎஸ்பி கிரியாசக்தி, இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் தலைமையில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Kummidipoondi , Demolition of retaining walls built on government land near Kummidipoondi: Action by local officials
× RELATED ஹோலி கொண்டாட்டத்தின்போது கல்லூரி...