×

முன்னாள் மாணவர்கள் 108 பேருக்கு 60ஆம் கல்யாணம்: கள்ளக்குறிச்சியில் ருசிகரம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1977-78ம் ஆண்டு பழைய எஸ்எஸ்எல்சி படித்த 108 முன்னாள் மாணவர்களுக்கு 60ம் அகவை திருமணம் நேற்று கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஒரே நேரத்தில் நடைபெற்றது.

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். எனவேதான் திருமண பந்தத்தை பெரியோர்கள் முன்னிலையில் ஆசீர்வாதத்துடன் இனைக்கப்படுகிறது. அப்போது திருமண நாளில் பெரியோர்கள் பல்லாண்டு நீடூழி வாழவேண்டும் என மணமக்களை வாழ்த்துகிறார்கள். அவ்வாறு திருமணம் செய்யும் தம்பதிகள் ஏராளமானோர் மணிவிழாவை கடந்து பேரக்குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்கின்றனர். ஆனால் ஒரே பள்ளியில் படித்த 108 பேர் மணிவிழா கொண்டாடிய சம்பவம் கள்ளக்குறிச்சியில் அரங்கேறி உள்ளது.

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1977-78ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் தற்போது அரசு பணி, சுயதொழில், தொழில் அதிபர்களாக வெளிமாவட்டம், வெளி மாநிலம், வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். இவர்களை ஒருங்கிணைத்து 60ம் கல்யாணம் நடத்த முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் திட்டமிட்டனர். அதன்படி பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் 108 பேரின் விலாசம் கொண்டு அடையாளம் கண்டுபிடித்து ஒருங்கிணைத்து அகவை திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர்.

தொடர்ந்து நேற்று 108 முன்னாள் மாணவர்கள் தங்களது குடும்பத்தினருடன் கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் ஒன்று கூடினர். இதனை தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் 108 பேருக்கும் 60ஆம் கல்யாணம் அந்தந்த குடும்பத்தினரின் முன்னிலையில் நடைபெற்றது. இதில் முன்னாள் மாணவர்களின் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்பு எஸ்எஸ்எல்சி படித்த முன்னாள் மாணவர்களின் 60ம் கல்யாணம் ஒரே நாளில் நடைபெற்ற நிகழ்ச்சியை கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Kalalkurichi , 60th wedding for 108 ex-students: Kalalkurichi is delicious
× RELATED எஸ்.ஐ. வீட்டில் வெள்ளி பொருட்கள் திருட்டு