திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே பல்லவர், சோழர், விஜயநகர கால கற்சிலைகள் கண்டெடுப்பு

ஜோலார்பேட்டை : திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே பல்லவர், சோழர், விஜயநகர காலத்து கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் க.மோகன் காந்தி, காணி நிலம் மு.முனிசாமி ஆகியோர் மேற்கொண்ட களஆய்வில் பல்லவர், சோழர், விஜயநரக காலத்தை சேர்ந்த 3 கற்சிலைகளை அடையாளம் கண்டெடுத்துள்ளனர்.

இதுகுறித்து பேராசிரியர் க.மோகன் காந்தி கூறியதாவது:திருப்பத்தூர் மாவட்டம் பல வரலாற்று பொக்கிஷங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. எங்கள் அய்வுக்குழு தொடர்ச்சியாக பல புதிய கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக திருப்பத்தூரில் இருந்து புதுப்பேட்டைக்கு செல்லும் வழியில் அச்சமங்கலம் என்னும் கிராமம் உள்ளது. இந்த ஊரில் சாலையோரம் உள்ள பெரிய அரச மரத்தடியில் எவ்வித மேற்கூரையும் இல்லாமல் திறந்த வெளியில் 3 வரலாற்று சிறப்பு மிக்க கற்சிலைகள் காணப்படுகின்றன.

முதல் கற்சிலை கன்னிமார் சிலையாகும். 7 கன்னிமார்களை ஒரு பெரிய பலகைக்கல்லில் படைப்புச் சிற்பமாக செதுக்கி வழிபடுவது மரபு. ஆனால் இங்குள்ள கற்சிலை உடைந்துள்ளது. மூன்று கன்னியரின் உருவங்கள் மட்டுமே காணப்படுகின்றன. நான்காவது கன்னியின் கால் பகுதி மட்டுமே காணலாகிறது. கன்னியர் வழிபாடு என்பது தமிழர் பண்பாட்டில் சிறப்பிடம் பெறுவதாகும். தாய்த்தெய்வ வழிபாட்டு முறை தமிழகத்தில் செழித்தோங்கி இருந்ததற்கு இது தக்க சான்றாகும். இக்கற்சிலைகள் கி.பி. 7ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். இக்காலத்தில் பல்லவ மன்னர்கள் தமிழகத்தின் பல பகுதியை சிறப்பாக ஆட்சி செய்தனர். பல்லவர்கள் ஆட்சி புரிந்த சென்னை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்கள் உள்ளடங்கும்.

பல்லவர் காலம் தொட்டு அச்சமங்கலம் சிறந்து விளங்கியதை இதன் மூலம் அறியலாம்.எங்கள் ஆய்வுக்குழு சில ஆண்டுகளுக்கு முன்பு ஆம்பூர் வட்டம் ஆசனாம்பட்டு என்னும் ஊரில் பல்லவர் கால நடுகற்கள் ஐந்தினை ஒரே இடத்தில் கண்டறிந்தோம். இதில் அச்சமங்கலத்தை சேர்ந்த வேட்டரடிவியமன் என்ற வீரன் தன் ஊர் பசுக்கூட்டத்தை கவர்ந்து சென்ற படுவூர் கோட்டத்தை சேர்ந்த குலைய மாறன் என்பவனை எதிர்த்துப் போரிட்டு உயிர்விட்டான் என்ற கல்வெட்டினை கண்டறிந்திருந்தோம்.

எனவே அச்சமங்கலம் என்ற ஊர் பல்லவர் காலம் தொட்டு இதே பெயரோடு இன்றும் விளங்குவது சிறப்புடைய ஒன்றாகும்.2வது சிலை விநாயகர் சிலையாகும். இச்சிலை மிகவும் நேர்த்தியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. நான்கு கைகளுடன் விநாயகர் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். விநாயகரின் இடது முன் கை உடைந்துள்ளது. இச்சிலை கி.பி. 16ம் நூற்றாண்டை சேர்ந்த விஜய நகர காலத்து சிலையாகும்.

மூன்றாவது சிலை தட்சிணாமூர்த்தி சிலையாகும். தட்சிணாமூர்த்தியின் உடல் பகுதி முழுமையாக உடைந்துள்ளது. இடுப்புப் பகுதியில இருந்து கால் பகுதி வரை மட்டுமே காட்சித் தருகிறது. கால்களின் அடியில் முயலகன் என்னும் அரக்கனைத் தன் காலடியில் அழுத்திக் கொண்டிருக்கும் காட்சி மட்டுமே காணப்படுகிறது.

இத்தட்சிணா மூர்த்தியின் சிலையின் காலம் கி.பி. 10ம் நூற்றாண்டாகும். இந்த காலத்தில் பிற்கால சோழர்கள் தமிழகத்தை ஆட்சிப் புரிந்தார்கள்.இதன் மூலம் அச்சமங்கலம் என்னும் கிராமம் பல்லவர், சோழர், விஜய நகரக் காலம் வரை நன்கு வளர்ச்சியடைந்த நகரமாக இருந்திருக்க வேண்டும் என்பது இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. எங்கள் ஆராய்ச்சியின்போது ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராமன், தூய நெஞ்சக்கல்லூரியின் ஆங்கிலத்துறை பேராசிரியர் வ.மதன்குமார், ஊர் கவுண்டர் கணேசன் ஆகியோர் உடனிருந்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: