×

சரஸ்வதி பூஜையையொட்டி பொள்ளாச்சி மார்க்கெட்டில் வாழைத்தார் கூடுதல் விலைக்கு விற்பனை

பொள்ளாச்சி : பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு நேற்று வாழைத்தார் வரத்து அதிகமாக  இருந்தாலும், சரஸ்வதி பூஜையொட்டி கூடுதல் விலைக்கு விற்பனையானதாக  வியாபாரிகள் தெரிவித்தனர்.  பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டின்  ஒருப்பகுதியில், வாரத்தில் குறிப்பிட்ட நாட்கள் நடக்கும் வாழைத்தார்  விற்பனையில், சுற்றுவட்டார கிராம பகுதி மற்றும் தூத்துக்குடி, திருச்சி,  கரூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து  வாழைத்தார்கள்  கொண்டு வரப்படுகிறது.

அதனை,  உள்ளூர் வியாபாரிகள் மற்றும் கேரள வியாபாரிகள்  நேரில் வந்து, குறிப்பிட்ட விலை நிர்ணயித்து வாங்கி செல்கின்றனர். அண்மையில் தென்மேற்கு பருவமழையின் போது, வாழை அறுவடை பணி  சற்று பாதிக்கப்பட்டது. இதனால், கடந்த  ஆகஸ்ட் மாதம் துவக்கத்திலிருந்து  சில வாரமாக மார்க்கெட்டுக்கு வாழைத்தார் வரத்து குறைவாக இருந்தது. பின்  கடந்த செப்டம்பர் மாதம்  வெயிலின் தாக்கத்தால், உள்ளூர் மற்றும்  வெளியூர்களில் இருந்து வாழைத்தார் வரத்து அதிகமானது.

அதனை பெரும்பாலும்  கேரள வியாபாரிகளே வாங்கி சென்றுள்ளனர்.புரட்டாசியையொட்டி கடந்த  இரண்டு வாரமாக விஷேச நாட்கள் இல்லாததால், அனைத்து ரக வாழைத்தார்களும்  குறைவான விலைக்கு விற்பனையாகியுள்ளது. இந்நிலையில், நாளை (4ம் தேதி) சரஸ்வதி  பூஜை, நாளை மறுநாள் (5ம் தேதி)  விஜயதசமி  என்பதால்,   இந்த வாரத்தில்  நேற்று முன்தினம் மற்றும் நேற்று என தொடர்ந்து இரண்டு நாட்கள் நடந்த  ஏலத்தின்போது, பெரும்பாலான வாழைத்தார்கள் சுற்றுவட்டார கிராமங்களில்  இருந்தே கொண்டுவரப்பட்டது. இருப்பினும்,  அனைத்து ரக வாழைத்தார்களும்  கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.

இதில் செவ்வாழை ஒரு கிலோ  ரூ.55 வரையிலும் ஏலம்போனது. மோரீஸ் ரூ.44க்கும், பூவன் தார் ரூ.45வரையிலும்,  கற்பூரவள்ளி ரூ.40க்கும், ரஸ்தாளி ரூ.38க்கும், கேரள ரஷ்தாளி ஒருகிலோ  ரூ.48க்கும் என, கூடுதல் விலைக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : Saraswati Puja ,Pollachi market , Pollachi: Despite the large influx of bananas to the Pollachi market yesterday, they were sold at a higher price on the occasion of Saraswati Puja.
× RELATED சித்திரை விசுவையொட்டி பொள்ளாச்சி...