×

மருத்துவக்குடி காசி விஸ்வநாத சுவாமி கோயிலில் 83 ஆண்டுகளுக்கு பின் ரூ.75 லட்சத்தில் புனரமைப்பு-விமானங்களுக்கு பஞ்சவர்ணம் பூசும் பணி விறுவிறுப்பு

திருவிடைமருதுார் : திருவிடைமருதுார் அருகே ஆடுதுறை மருத்துவக்குடியில் வம்ச விருத்தி தலமாக போற்றப்படும் காசி விஸ்வநாத சுவாமி கோயிலில் 83 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.75 லட்சம் மதிப்பில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு விமானங்களுக்கு பஞ்சவர்ணம் பூசும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.தஞ்சை மாவட்டம் ஆடுதுறை அடுத்துள்ள மருத்துவகுடி கிராமத்தின் ஈசான்ய பாகமாக அமைந்துள்ள நடு அக்ரஹாரம் தெருவில் அறநிலையத் துறைக்கு சொந்தமான காசி விசாலாட்சி அம்பாள் சமேத காசி விஸ்வநாத சுவாமி கோயில் உள்ளது. மராட்டியர் ஆட்சி காலத்தில் பல நுாறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக செவிவழி செய்தி உள்ளது.

இத்தலம் வம்ச விருத்தி தலமாக போற்றப்படுகிறது. பல வேத விற்பன்னர்கள் இக்கிராமத்தில் வசித்து வேத பாராயணங்கள் செய்துள்ளனர். காசி விஸ்வநாத பெருமானை அமாவாசைதோறும் தயிர் அபிஷேகம் செய்து வழிபடுவோருக்கு சத்புத்திர பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கையால் ஐதீக முறைப்படி வழிபடுகின்றனர். இக்கோயிலில் சுவாமி, அம்பாள், விநாயகர், சண்முகர் ஆகிய 4 சன்னதிகளில் விமானங்களும், தெட்சிணாமூர்த்தி, நந்திகேஸ்வரர், சண்டிகேஸ்வரர், சனி பகவான் மண்டபங்களும் உள்ளன.

இக்கோயிலில் கடைசியாக 1938ம் ஆண்டு திருப்பணி வேலைகள் செய்து மகா கும்பாபிஷேகம் நடந்துள்ளது. இதையடுத்து 83 ஆண்டுகள் ஆன நிலையில் கோயில் முழுவதும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. எனவே கோயில் முழுவதும் திருப்பணி வேலைகள் செய்து புனரமைப்பு மேற்கொள்வதென கிராமவாசிகள், சிவாலய கைங்கர்ய சபாவினர் முடிவெடுத்துள்ளனர்.
இதைஒட்டி கடந்த ஜனவரி மாதம் கோயிலில் பாலாலய விழா நடந்தது. உபயதாரர், நன்கொடையாளர் மூலம் ரூ.75 லட்சம் மதிப்பில் கோயில் முழுவதும் திருப்பணி வேலைகள் செய்யப்பட உள்ளது. இதில் இப்போது 4 விமானங்களின் திருப்பணி வேலைகள் ரூ.30 லட்சம் மதிப்பில் செய்து முடிக்கப்பட்டு பஞ்சவர்ணம் தீட்டும் பணி நடக்கிறது.

83 ஆண்டுகளுக்கு பிறகு புனரமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. இதில் மதமுள்ள நுழைவு வாயில் மகா மண்டபம், திருமடப்பள்ளி, கோயில் முழுவதும் சுமார் 10 ஆயிரம் சதுரடி தரைத்தளம் ஆகிய திருப்பணி வேலைகள் சுமார் ரூ.25 லட்சம் செலவிலும், யாகசாலை, கும்பாபிஷேகம், அன்னதானம் போன்ற தொடர்புடைய பணிகளை உபய திருப்பணியாக செய்து கொடுக்க நன்கொடையாளர்கள் வேண்டப்படுகின்றனர் என திருப்பணி கமிட்டியினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கோயிலை சுற்றியுள்ள மதில் சுவரை ரூ.22 லட்சம் மதிப்பில் ஒன்னேகால் அடி அகலம், சுமார் 100 அடி நீளம் அறநிலையத் துறை சார்பில் செய்யப்பட உள்ளது. ஆனால் கும்பாபிஷேகத்திற்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில்அறநிலையத் துறை இன்னும் பணிகளை தொடங்காமல் உள்ளனர்.கோயில் முழுவதும் விறுவிறுப்பாக திருப்பணி வேலைகள் நடந்து வரும் நிலையில் மற்ற பணிகளும் விரைவில் தொடங்கி செய்து முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Vidyakudi ,Kasi Viswanath Swami Temple , Tiruvidaimaruduar : In the Kashi Vishwanatha Swamy Temple, which is revered as a place of dynasty, at Aduthurai Madhyakudi near Tiruvidaimaruduar, 83
× RELATED மருத்துவக்குடி காசி விஸ்வநாத சுவாமி...