×

வாலிபர் கொலை வழக்கில் திருப்பம் காதலியை அவதூறாக பேசியதால் நண்பர்களே கொன்றது அம்பலம்: கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை:கேளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து புறவழிச்சாலை செல்லும் சாலையில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் உள்ள புதர் பகுதியில் நேற்று முன்தினம் காலை சுமார் 22 வயது மதிக்கத்தக்க வாலிபர் தலை, முகம் ஆகிய இடங்களில் பலத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதை பார்த்த பொதுமக்கள் கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். கொலை செய்யப்பட்ட வாலிபரின் மார்பில் சூர்யா என்றும், இடது கையில் சூர்யா, பிரதீப் என்றும் ஆங்கிலத்தில் பச்சை குத்தப்பட்டிருந்தது. சடலம் கிடந்த இடத்தில் மது அருந்தியதற்கான அடையாளங்கள் காணப்பட்டன. வாலிபரின் உடலில் சட்டை இல்லாமல் கருநீல நிற ஜீன்ஸ் பேண்ட் மட்டும் அணிந்திருந்தார்.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு இந்த கொலை நடந்திருப்பதும் தெரிய வந்தது. மேலும், கொலை செய்யப்பட்ட நபர் யார் எந்த ஊர் என்ற விபரம் கேளம்பாக்கம் போலீசாா் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபர் கேளம்பாக்கத்தை அடுத்த படூர் கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரின் மகன் லட்சுமிகாந்த் (21) என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவனைக் கொலை செய்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட நபரின் கைகளில் சூர்யா, பிரதீப் என்ற பெயர்கள் பச்சை குத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து இதுகுறித்து விசாரணை நடத்தியபோது அவர்கள் நண்பர்கள் என்று தெரிய வந்தது. இதையடுத்து கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையிலான போலீசார் பிரதீப்பின் வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, போலீசாரிடம் பேசிய பிரதீப் தான் வேலை விஷயமாக 20 நாட்களாக வெளியூருக்கு சென்று விட்டதாகவும், லட்சுமிகாந்தை பார்க்கவில்ைல என்றும் தற்போது ஊருக்கு வந்தபோதுதான் கொலை விவகாரம் தெரியும் என்றும் கூறினான். இருப்பினும், அவன் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் போலீசார் பிரதீப்பை காவல் நிலையம் அழைத்து விசாரணை நடத்தினர். மேலும், பீரதீப் வீடு அமைந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டபோது பிரதீப் ெகாலை செய்யப்பட்ட லட்சுமிகாந்துடன் மோட்டார் சைக்கிளில் செல்வது பதிவாகி இருந்தது. இதையடுத்து அந்த பதிவை பிரதீப்பிடம் காட்டிய போலீசார் 20 நாட்களாக வெளியூரில் இருந்து விட்டு கடந்த வெள்ளிக் கிழமை மோட்டார் சைக்கிளில் ஒன்றாக சென்றது எப்படி என்று கேள்வி எழுப்பினர். இதையடுத்து, தானும் தங்களது நண்பர் சதீஷ்கண்ணனும் சேர்ந்து லட்சுமி காந்தை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டான்.

மூவரும் நெருங்கிய நண்பர்கள் என்றும், கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஒன்றாக மது அருந்தியதாகவும், போதை அதிகமானதும் தனது காதலியைப் பற்றி லட்சுமிகாந்த் அசிங்கமாக பேசியதாகவும் இதனால் ஆத்திரத்தில் பீர் பாட்டிலால் தாக்கியதாகவும் இதில் காயமடைந்த லட்சுமிகாந்த் தப்பி ஓட முயற்சித்த போது காலை இழுத்து கீழே தள்ளி அருகில் இருந்த கருங்கல்லால் தலையில் தாக்கி கொலை செய்ததாகவும் தெரிவித்தான். இதையடுத்து கொலையில் ஈடுபட்ட படூரைச் சேர்ந்த பிரதீப் என்கிற பிரதீப்குமார் (21), கழிப்பட்டூரைச் சேர்ந்த சதீஷ்கண்ணன் (24) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கைதானவர்களிடம் இருந்து சட்டை, செல்போன், இரண்டு மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 6 மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்த கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையிலான குழுவினரை தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ், இணை ஆணையர் ஜோஸ் தங்கையா, உதவி ஆணையர் ரவிக்குமரன் ஆகியோர் பாராட்டினர்.


Tags : Tirupam , In the youth murder case, Tirupam was killed by his friends because he slandered his girlfriend.
× RELATED பூக்கடை கொள்ளையில் திருப்பம் போலீசார் போர்வையில் 24 லட்சம் ரூபாய் பறிப்பு