×

ஆயுதபூஜை தொடர் விடுமுறை சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் மூலம் 3.12 லட்சம் பேர் பயணம்; கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லியில் மக்கள் கூட்டம் அலைமோதியது

சென்னை: ஆயுதபூஜையொட்டி சென்னையில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் கடந்த 3 நாட்களில் 3,12,345 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் கோயம்பேடு, பெருங்களத்தூர், பூந்தமல்லி பேருந்து நிலையங்களில் விடிய விடிய ஆயிரக்கணக்கான மக்கள் பேருந்துகளுக்காக காத்திருந்தனர். ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகைகள் வரும் 4, 5 தேதிகளில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அதேநேரம் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை கடந்த 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை பள்ளிக்கல்வித்துறைமுறை அறிவித்துள்ளது. இதனால், பொதுமக்கள் காலாண்டு விடுமுறை மற்றும் ஆயுதபூஜையை சொந்த ஊர்களில் கொண்டாட முடிவு செய்து கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அரசு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் மற்றும் வசதியானவர்கள் சொந்த கார்களில் செல்ல ஆரம்பித்துள்ளனர்.

தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தடையின்றி சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் கடந்த 30ம் தேதி முதல் வழக்கமாக சென்னையில் இருந்து பிறஇடங்களுக்கு இயக்கப்படும்  2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 2,050 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல் பிற ஊர்களில் இருந்து சென்னை உட்பட முக்கிய நகரங்களுக்கு 1,650 சிறப்புப் பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி மாநகர போக்குவரத்து கழக பணிமனை, கோயம்பேடு பேருந்து முனையத்தில் இருந்து வழக்கமான பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் இருந்து லட்சக்கணக்கான பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு அரசு பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர்.

முதல் நாளான கடந்த 1ம் தேதி சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 744 பேருந்துகள் இயக்கப்பட்டன. இரண்டாவது நாளான நேற்று முன்தினம் வழக்கமான பேருந்துகளுடன் மொத்தம் 3,500க்கும் மேற்பட்ட  பேருந்துகள் இயக்கப்பட்டன. அதன் மூலம் 2.50 லட்சம் பேர் பயணித்தனர். 3வது நாளாக நேற்று நள்ளிரவு வரை பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தனர். இதற்காக வழக்கமான பேருந்துகளுடன் 600 சிறப்பு பேருந்துகள் நேற்று இயக்கப்பட்டன. அந்த வகையில் கடந்த 3 நாட்களில் சென்னையில் இருந்து அரசு பேருந்துகள் மூலம் மொத்தம் 3,12,345 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டதால் 3 இடங்களிலும் வழிப்பறி, திருட்டு மற்றும் பொதுமக்கள் உடமைகள் பாதுகாக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பேருந்து நிலையங்களில் சாதாரண உடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோயம்பேடு, தாம்பரம், பெருங்களத்தூர், திருவான்மியூர், பூந்தமல்லி பகுதிகளில் நேற்று அதிகாலை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் பணிகளில் ஈடுபட்டிருந்தாலும், ஒரே நேரத்தில் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்ததால் நெரிசல் ஏற்பட்டது. இதேபோல், சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப வரும் 5ம் தேதி முதல் 2,050 சிறப்பு பேருந்துகள் சென்னைக்கு இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆயுதபூஜை, காலாண்டு விடுமுறை என தொடர் விடுமுறையால் பொதுமக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்கு சென்று வர போக்குவரத்து துறை சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Chennai ,Ayudha Puja holiday ,Koyambedu ,Thambaram ,Poontamalli , 3.12 lakh people travel by special buses from Chennai during Ayudha Puja holiday; Crowds of people flocked to Koyambedu, Tambaram and Poontamalli
× RELATED பறக்கும் படை சோதனையில் ஆவணமின்றி...