மின்வேலியில் சிக்கி சிறுத்தை பலி எதிரொலி; ஓ.பன்னீர்செல்வம் மகனின் தோட்ட மேலாளர்கள் 2 பேர் கைது: ரவீந்திரநாத் எம்.பி. மீதும் நடவடிக்கை?

பெரியகுளம்: பெரியகுளத்தில் வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் ரவீந்திரநாத் எம்.பி.யின் தோட்ட மேலாளர்கள் இருவரை வனத்துறையினர் கைது செய்தனர். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சொர்க்கம் கோம்பை வனப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் கடந்த 27ம் தேதி சிறுத்தை ஒன்று சிக்கி இருப்பதாக தகவலறிந்து அதை காப்பாற்ற முயன்ற போது தேனி உதவி வனப்பாதுகாப்பு அலுவலர் மகேந்திரனை தாக்கியது, அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் தப்பி சென்ற சிறுத்தை மறுநாள், 28ம் தேதி மாலை அதே வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளது. வனத்துறையினர், கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு அவசர அவசரமாக பிரேத பரிசோதனை செய்து அதே இடத்தில் சிறுத்தையை எரித்ததாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. வனத்துறையினர் விசாரித்ததில், சிறுத்தை வேலியில் சிக்கி உயிரிழந்த இடம் தேனி எம்.பியும், ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான  ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டம் என்பது தெரியவந்தது. அங்கு ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் என்பவர் தற்காலிகமாக ஆட்டுமந்தை அமைத்துள்ளார். சில தினங்களுக்கு முன்பாக இரு ஆடுகளை சிறுத்தை கொன்றதால், சிறுத்தையை மின்வேலியில் சிக்கவைத்து கொலை செய்திருக்கலாம் என்று கூறி அலெக்ஸ் பாண்டியனை கடந்த 1ம் தேதி கைது செய்தனர்.

இந்நிலையில் திடீர் திருப்பமாக, ரவீந்திரநாத் எம்பியின் பண்ணை மேலாளர்களான தங்கவேல் மற்றும் ராஜவேல் ஆகிய இருவரை வனத்துறையினர் நேற்று கைது செய்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘நிச்சயமாக நிலத்தின் உரிமையாளரான ரவீந்திரநாத் மீது வனச்சட்டத்தின் படி நடவடிக்கை இருக்கும். அவர் எம்.பி. என்பதால் சில விதிமுறைகள் உள்ளன. முறைப்படி அனுமதி பெற்று ரவீந்திரநாத்தையும் விசாரணைக்கு அழைப்போம்’’ என தெரிவித்தனர்.

Related Stories: