நீலகிரியில் குடியிருப்பு கட்ட அனுமதி பெற பல மாதங்கள் காத்திருக்கும் மக்கள்; மீண்டும் உள்ளாட்சிகளே அனுமதி வழங்கும் முறையை கொண்டு வர வலியுறுத்தல்

ஊட்டி:  நீலகிரி மாவட்டத்தில் நகர் மற்றும் கிராமப்புறங்களில் குடியிருப்புகள் கட்ட மீண்டும் உள்ளாட்சி அமைப்புகளே அனுமதி வழங்கும் முறையை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம். இங்கு இயற்கை எழில் கொஞ்சும் மலைகள் மற்றும் வனங்கள் அதிகளவு உள்ளன. எங்கு பார்த்தாலும் பச்சை கம்பளம் விரித்தார் போல் காட்சியளிக்கும் தேயிலை தோட்டங்கள் மற்றும் பள்ளதாக்குகளில் காய்கறி தோட்டங்கள் காணப்படுகிறது. இது தவிர இயற்கை எழில் கொஞ்சும் அணைகள், நீரோடைகள் மற்றும் பூங்காக்கள் ஆகியவை உள்ளன. சில ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் காலநிலை நீலகிரி மாவட்டத்தில் நிலவும் நிலையில், ஏராளமான மக்கள் இதனை விரும்புகின்றனர். இந்நிலையில், பெரும்பாலான வெளி மாநில மக்கள் மற்றும் சமவெளிப் பகுதிகளை சேர்ந்த மக்கள் இங்கு படையெடுக்க துவங்கினர். மேலும், நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் இங்கு வரத்துவங்கினர். இதனால், மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் படிப்படியாக வணிக ரீதியாக கட்டிடங்கள் உருவாகத்துவங்கின.

ஒவ்வொரு கட்டிடங்களும் வானுயுர்ந்து கட்ட ஆரம்பித்தனர். அதாவது, நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்ற போதிலும் பல்வேறு பகுதிகளிலும், மலைச் சரிவுகளிலும், தேயிலை தோட்டங்களின் நடுவிலும் பல அடுக்கு மாடி காட்டிடங்கள் வரத்துவங்கின. இதனால், நீலகிரி மாவட்டத்தின் இயற்கை அழகு மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கும் நிலை உருவாகியது. இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் வணிக ரீதியாக கட்டிடங்கள் பெருகுவதை தடுக்க அரசு மாஸ்டர் பிளான் சட்டம் கொண்டு வந்து கடிவாளத்தை போட்டது. கடந்த 1993ம் ஆண்டு இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. இத்திட்டம் வெளியூர்களில் இருந்து வந்து பல மாடி கட்டிடங்களை கட்டுபவர்களை கட்டுக்குள் கொண்டு வரவும், வணிக ரீதியில் பல மாடி கட்டிடங்கள் உருவாவதை தடுப்பதற்காக இந்த மாஸ்டர் பிளான் சட்டம் கொண்டு வந்தாலும், இது உள்ளூர் மக்களுக்கும் பொருந்தியது. அதன் பின், நீலகிரி மாவட்டத்தில் சாதாரண சிறிய குடியிருப்புகள் முதல் பெரிய கட்டிடங்கள் கட்டுவதற்கு அரசின் அனுமதி பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. 1993ம் ஆண்டு முதல் உள்ளாட்சி அமைப்புக்களில் மட்டுமின்றி, வனத்துறை, புவியியல் துறை மற்றும் வேளாண் பொறியில் துறை ஆகிய மூன்று துறைகளிடமும் அனுமதி பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். உடனடியாக அனுமதி கிடைக்காத நிலையில், மக்கள் அலைகழிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து, பெரும்பாலான மக்கள் உள்ளாட்சி அமைப்புக்களில் மட்டும் அனுமதி பெற்று கட்டிடங்கள் கட்ட வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

 இதனை தொடர்ந்து கடந்த 1996ம் ஆண்டு முதல் உள்ளாட்சிகளில் அனுமதி பெற்று கட்டிடங்கள் கட்டும் முறை கொண்டு வரப்பட்டது. அதாவது, 1500 சதுர அடிக்குள் உள்ள கட்டிடங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் மட்டும் அனுமதி கொடுத்தால் போதும் என சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. 1500 முதல் 2000 ஆயிரம் சதுர அடி வரையுள்ள கட்டிடங்களுக்கு வனத்துறை, புவியல்துறை, வேளாண் பொறியில் துறையிடம் அனுமதி பெற வேண்டும். 2500க்கு மேல் 5 ஆயிரம் சதுர அடிக்குள் உள்ள கட்டிடத்திற்கு கலெக்டர் தலைமையிலான உயர்மட்ட குழுவிடம் அனுமதி பெற வேண்டும் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. 1500 சதுர அடிக்குள் கட்டிடங்கள் கட்டுவதற்கு உள்ளாட்சி அமைப்புகளிடம் மட்டும் அனுமதி பெற்றால் போதுமானது என்ற சட்டம் கொண்டு வந்த பின்னர், நகர் புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் எளிதாக குடியிருப்புகளுக்கான அனுமதி பெற்று கட்டிடங்கள் கட்டத்துவங்கினர். இந்த நடைமுறை கடந்த 2016ம் ஆண்டு வரை இருந்தது. 2016க்கு பின் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.

இதனால், கட்டிட அனுமதி விவகாரத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அதிகாரிகரின் தலையீடு அதிகரித்தது.நகர் புறங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் புற்றீசல் போன்ற கட்டிடங்கள் அதிகரிக்கத் துவங்கினர். இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நீலகிரியில் கட்டிடங்கள் கட்டுவதற்கான அனுமதி பெற ஒரு குழு அமைத்தது. அந்த குழுவில் அனுமதி பெற்றால் மட்டுமே கட்டிடங்கள் கட்ட முடியும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. அன்று முதல் தற்போது வரை நீலகிரியில் குடியிருப்புகளுக்கான கட்டிடங்கள் அனைத்தும் கட்டுவதற்கு இந்த குழுவிடம் அனுமதி பெற வேண்டியுள்ளது. ஆனால், இந்த குழுவிடம் இருந்து உனடியாக கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி கிடைப்பதில்லை என்ற புகார் பல ஆண்டுகளாக உள்ளது. சாதாரணமாக 1500 சதுர அடியில் வீடுகள் கட்ட வேண்டும் என்றாலும், பல மாதங்கள் அனுமதிக்காக காத்து கிடக்க வேண்டியுள்ளது. பலர் வங்கிகளில் கடன் வாங்கி வைத்த தொகை கரைந்து போய்விடுகிறது என பொதுமக்கள் பலரும் புலம்பி வருகின்றனர். குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மீண்டும் 1500 சதுர அடிக்குள் வீடுகள் கட்ட உள்ளாட்சி அமைப்புக்களிலேயே அனுமதி பெற வேண்டும் என்ற முறையை அரசு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஊட்டி நகராட்சி துணைத்தலைவர் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் மாஸ்டர் பிளான் சட்டம் கொண்டு வந்த பின்னர், 1500 சதுர அடிக்குள் கட்டிடங்கள் கட்டுவதற்கு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அனுமதி வழங்கப்பட்டு வந்தது.  இதனால், சாதாரண ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் எளிதாக அனுமதி பெற்று வீடுகளை கட்டி வந்தனர். ஆனால், கடந்த 2016ம் ஆண்டு முதல் உள்ளாட்சி தேர்தல் நடக்காத நிலையில், கட்டிடங்களுக்கான அனுமதி கொடுக்கும் அதிகாரத்தை மாவட்ட நிர்வாகம் எடுத்துக் கொண்டது. அதற்கென ஒரு குழுவையும் அமைத்தது. அதன் பின் எளிதாக கட்டிடங்கள் கட்ட அனுமதி கிடைப்பதில்லை. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இனி உள்ளாட்சி அமைப்புக்களே கட்டிடங்களுக்கான அனுமதி கொடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும். இதன் மூலம் எளிதாக மக்கள் குடியிருப்புக்களுக்கான அனுமதி பெற முடியும்.  இது தொடர்பாக, ஊட்டி நகராட்சி கவுன்சிலர்கள் அனைவரும் நீலகிரி மாவட்ட கலெக்டரை சந்திக்க உள்ளோம், என்றார். கடந்த 2016ம் ஆண்டு முதல் உள்ளாட்சி தேர்தல் நடக்காத நிலையில், கட்டிடங்களுக்கான அனுமதி கொடுக்கும் அதிகாரத்தை மாவட்ட நிர்வாகம் எடுத்துக் கொண்டது. அதற்கென ஒரு குழுவையும் அமைத்தது. அதன் பின் எளிதாக கட்டிடங்கள் கட்ட அனுமதி கிடைப்பதில்லை.

Related Stories: