×

2014ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அகற்றப்பட்ட தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை விற்பனை கடை மீண்டும் திறப்பு: சுற்றுலா, வெளிநாட்டு பயணிகள் மகிழ்ச்சி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில் முன்பு தலையாட்டி பொம்மை விற்பனை கடைகள் இருந்தன. கடந்த 2014-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் இந்த கடைகள் அகற்றப்பட்டன. இதையடுத்து மீண்டும் பெரிய கோயில் பகுதியில் தலையாட்டி பொம்மைகள் விற்பனை அங்காடி திறக்க வேண்டும் என்று பெரிய கோயில் வியாபாரிகள் சங்கம், வர்த்தக சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள், வியாபாரிகள் சார்பில் தொடர்ந்து பல போராட்டங்கள், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்ட்ங்கள் மூலம் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இதை தொடர்ந்து பெரிய கோயில் முன்பு ஒரே இடத்தில் 34 தலையாட்டி பொம்மைகள் விற்பனை அங்காடி அமைக்க முடிவு செய்யப்பட்டது. ராஜராஜன் கைவினை கலைப் பொருளகம் என்ற பெயரில் அங்காடி அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வந்த நிலையில் பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை அடுத்து நேற்று ராஜராஜன் கைவினை கலைப் பொருளகம் திறப்பு விழா நடைபெற்றது. இதனை பெரிய கோயில் வியாபாரிகள் சங்கம் தலைவர் ஜெயக்குமார் திறந்து வைத்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், தஞ்சாவூர் பெரிய கோயில் முன்பு ஒரே இடத்தில் புவிசார் குறியீடு பெற்ற தலையாட்டி பொம்மைகள் விற்பனை அங்காடி அமைக்க வேண்டும் என்று வியாபாரிகள் தொடர்ந்து கோரிக்கை கொடுத்து வந்தோம்.

இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் பழனிமாணிக்கம், மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் பலரின் முயற்சியால் ஒரே இடத்தில் அங்காடிகள் அமைக்கப்பட்டு நேற்று திறக்கப்பட்டது . அதில் மொத்தம் 34 அங்காடிகள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு விலை குறைவாகவும், தரமாகவும் தலையாட்டி பொம்மைகள் கிடைக்கும் என்றார். தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரிய கோயிலை சுற்றி பார்த்துவிட்டு முதலில் வாங்க நினைப்பது தலையாட்டி பொம்மைகள் தான். தற்போது ஒரே இடத்தில் 34 அங்காடிகள் திறக்கப்பட்டுள்ளதால் வெளிநாட்டினரும், சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Thanjavur Talayati ,AIADMK , Thanjavur Talayati toy shop, demolished in 2014 during AIADMK rule, reopens: tourism, foreign tourists happy
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...