×

கவுகாத்தியில் இன்று 2வது டி.20; தொடரை கைப்பற்ற இந்தியா ஆயத்தம்

கவுகாத்தி: இந்தியா-தென்ஆப்ரிக்கா இடையே 3 போட்டி கொண்ட டி.20 தொடரில் திருவனந்தபுரத்தில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் 2வது போட்டி இன்று கவுகாத்தியில் நடக்கிறது. இதிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா களம் இறங்குகிறது. இந்தியாவில் பேட்டிங் வலுவாக உள்ளது. குறிப்பாக சூர்யகுமார் யாதவ் சூப்பர் பார்மில் உள்ளார். பவுலிங் தான் பலவீனமாக உள்ளது. முதல் போட்டியில் அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர் அபாரமாக பந்துவீசினர். சுழலில் அஸ்வின், அக்‌ஷர் பட்டேல் சிக்கனமாக செயல்பட்டனர்.

இன்றும் அவர்கள் அசத்தினால் இந்தியாவுக்கு வெற்றி நிச்சயம். மறுபுறம் தென்ஆப்ரிக்கா முதல் போட்டியில் பேட்டிங்கில் சொதப்பிய நிலையில் இன்று பதிலடி கொடுக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது. கேப்டன் பவுமா ரன் அடிக்கமுடியாமல் தடுமாறுவதால் விமர்சனம் எழுந்துள்ளது. டிகாக், டேவிட்மில்லர், மார்க்ரம் என அதிரடி வீரர்கள் உள்ளனர். பந்துவீச்சில் ரபாடா, அன்ரிச் நோர்டியா, தப்ரைஸ் ஷம்சி மிரட்டலாம். இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்கி நடக்கிறது. இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா கடந்த 2 நாட்களாக பயிற்சிக்கு வரவில்லை. நேற்று பத்திரிகையாளர் சந்திப்புக்கும் அவர் வரவில்லை. அவருக்கு பதிலாக டிராவிட் தான் நிருபர்களை சந்தித்தார்.

அவருக்கு காயம் எதுவும் இல்லை. ஆனால் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் அணியுடன் கவுகாத்தி வரவில்லை என கூறப்படுகிறது. இன்று காலை தான் அவர் கவுகாத்தி சேர்ந்தார் என தெரிகிறது. இருப்பினும் அவர் இன்று களம் இறங்குவார் என கூறப்பட்டுள்ளது. கவுகாத்தியில் இதற்கு முன் ஒரே ஒரு டி.20 போட்டி நடந்துள்ளது. இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2017ல் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 2020ல் இலங்கைக்கு எதிரான போட்டி கைவிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தியா-தென்ஆப்ரிக்கா இதுவரை 21 டி.20 போட்டிகளில் மோதி உள்ளன. இதில் 21ல் இந்தியா, 8ல் தெ.ஆ. வென்றுள்ளன. ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளது. இன்று 22வது முறையாக சந்திக்க உள்ளன.

நல்லதே நடக்கும் டிராவிட் நம்பிக்கை

இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அளித்த பேட்டி: பும்ரா காயம் விஷயத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க அவரது உடல் தகுதி நிலை குறித்த அதிகாரபூர்வ தகவலுக்காக காத்து இருக்கிறோம். தற்போது அவர் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து அதிகாரபூர்வமாக விலகி இருக்கிறார். உலக கோப்பை போட்டியில் இருந்து இன்னும் விலகவில்லை. அடுத்த ஒன்றிரண்டு நாட்களில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும். அதன் பிறகு தான் நாங்கள் எதுவும் சொல்ல முடியும். நல்லதே நடக்கும் என்று நம்புகிறோம். ஹர்ஷல் மனதளவில் வலிமையான வீரர். அவர் நன்றாக தயாராகி வருகிறார். ஐதராபாத் மற்றும் திருவனந்தபுரத்தில் அவர் கடைசி ஓவர்களை அற்புதமாக வீசினார். அவரின் பார்ம் குறித்து கவலைப்படவில்லை, என்றார்.

Tags : Guwahati ,India , Today 2nd T.20 in Guwahati; India is ready to win the series
× RELATED குத்துச்சண்டை போட்டியில் கிருஷ்ணகிரி மாணவர்கள் வெற்றி