காரை முந்தி செல்வதில் ஏற்பட்ட தகராறு கே.எஸ். அழகிரி பேத்திக்கும், ஐஏஎஸ் அதிகாரி மனைவிக்கும் கைகலப்பு; தலைமைச்செயலாளரை சந்தித்து கண்ணன் விளக்கம்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக பணியாற்றி வருபவர் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர் காரில் தன்னுடைய குழந்தையுடன் அசோக்நகர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். இவருக்கு பின்னால், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் பேரப்பிள்ளைகள் இன்னொரு காரில் அதே ரோட்டில் சென்றுள்ளனர். இதில், முன்னால் சென்று கொண்டிருந்த காரை ஓவர்டேக் செய்ய, கே.எஸ்.அழகிரியின் பேரப் பிள்ளைகளின் கார் முயன்றுள்ளது. ஆனால், அதற்கு வழிவிடாமல், ஐஏஎஸ் அதிகாரி ஓட்டி சென்ற கார் சென்றுள்ளது. இதனால், நடுரோட்டிலேயே ஓவர்டேக் செய்வதில் இவர்களுக்குள் சேசிங் நடந்துள்ளது. அதன் பின்பு வாகனத்தை முந்தி செல்வது தொடர்பாக நடுரோட்டில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதமானது, கைகலப்பானது. அப்போது, கே.எஸ்.அழகிரியின் பேத்தி, கண்ணனின் மனைவியை தாக்கியதாக தெரிகிறது. மனைவியை தன் கண் முன்னாலேயே தாக்கியதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ஐஏஎஸ் அதிகாரி கண்ணன், கே.எஸ்.அழகிரியின் பேத்தியை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. வாகனத்தை முந்தி செல்வது தொடர்பாக நடுரோட்டில் அரசியல் தலைவரின் பேத்தியும், ஐஏஎஸ் அதிகாரியின் மனைவியும் சண்டையிட்ட விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அசோக்நகர் காவல் நிலைய போலீசார் அவர்களை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது இரு தரப்பினரையும் போலீசார் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், அதற்குள் விஷயம் கே.எஸ்.அழகிரி வரை சென்று. அவரும் காவல் நிலையத்துக்கு விரைந்து வந்தார்.இறுதியில், ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதேநேரத்தில் கண்ணனின் மனைவியும், அழகிரியின் பேத்தி மீது புகார் செய்துள்ளார். இந்த இரு புகார்கள் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். அசோக்நகர் பகுதி, எப்போதுமே போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதி என்பதால் இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாகிவிட்டது.

Related Stories: