சமய நல்லிணக்க மனித சங்கிலி நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு விவகாரம்: உத்தரவை ரத்து செய்யக்கோரி வி.சி, மார்க்., இந்திய கம்யூ. கட்சிகள் ஐகோர்ட்டில் மனு..!!

சென்னை: சமய நல்லிணக்க மனித சங்கிலி நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2ம் தேதி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மதச்சார்பின்மையை வலியுறுத்தும் வகையில் சமய நல்லிணக்க மனித சங்கிலி நடத்த அனுமதி கேட்டு காவல்துறையிடம் விண்ணப்பிக்கப்பட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், மனித சங்கிலி நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்து கடந்த 29ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் கூறியுள்ளனர். பிஎப்ஐ அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதால் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றும் அதேநாளில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த இருப்பதாகவும் கூறி, தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும், தங்களையும் ஒரேமாதிரியாக பாவிக்க முடியாது என்பதால் சமய நல்லிணக்க மனித சங்கிலிக்கு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: