×

கவர்னர் மாளிகையில் நவராத்திரி கொலு; இன்று முதல் 5ம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிடலாம்: மின்னஞ்சலில் முன்பதிவு

சென்னை: சென்னை கவர்னர் மாளிகையில் நவராத்திரியை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள கொலுவினை இன்று முதல் வரும் 5ம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கை: சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் ஆளுநரின் துணைவியார் லட்சுமி ரவி ஆகியோரால் கடந்த 26ம் தேதி வைக்கப்பட்ட நவராத்திரி கொலுவை, இன்று முதல் 5ம் தேதி வரை நாள்தோறும் மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை பொது மக்கள் பார்வையிடலாம். விருப்பமுள்ள நபர்கள் தங்கள் பெயர், பாலினம், முகவரி, தொடர்பு எண், அடையாளச் சான்று மற்றும் பார்வையிடும் நாள் ஆகியவற்றை navaratrirb22@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி, அதனை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நாளொன்றுக்கு அதிகபட்சமாக 80 நபர்கள் வரை பார்வையிடலாம். மின்னஞ்சல் வாயிலாக உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், தங்களுக்கான ஒதுக்கீட்டு நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக, பார்வையாளர்கள் மின்னஞ்சலில் வழங்கிய அசல் அடையாளச் சான்றுடன் ஆளுநர் மாளிகையின் 2வது நுழைவாயிலுக்கு வர வேண்டும். இந்திய குடிமக்கள் புகைப்படத்துடன் கூடிய செல்லத்தக்க அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். வெளிநாட்டினர் அவர்களின் அடையாளத்திற்காக நுழைவாயிலில் கடவுச்சீட்டை காண்பிக்க வேண்டும். (இந்த அடையாளச் சான்று மின்னஞ்சலில் பதிவு செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட சான்றாக இருக்க வேண்டும்).

பார்வையாளர்கள் தனியாக அல்லது அதிகளவு 5 பேர் கொண்ட குழுவாக வரலாம். வளாகத்திற்குள் செல்போன் மற்றும் புகைப்படக் கருவிகள் அனுமதிக்கப்படமாட்டாது. பாதுகாப்புக் காரணங்களுக்காக, ஆளுநர் மாளிகையை  பார்வையிடச் செல்வதற்கான  கோரிக்கையை அங்கீகரிக்கும் மற்றும் நிராகரிக்கும்  உரிமை ஆளுநர் அலுவலகத்திற்கு உள்ளது.

Tags : Navratri Kolu ,Governor's House , Navratri Kolu at Governor's House; Public Visit from Today to 5th: Reservation by email
× RELATED ரோடு ஷோவுக்கு வந்தபோது ஆளுநர்...