×

உக்ரைன் பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைப்பு: அரசாணையில் புடின் கையெழுத்து

மாஸ்கோ: உக்ரைனிடம் இருந்து கைப்பற்றிய 2 பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைக்கும் அதிகாரப்பூர்வ ஆணையில் அதிபர் புடின் கையெழுத்திட்டார். நேட்டோவில் இணைய எதிர்ப்பு தெரிவித்து, உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் 7 மாதங்களை கடந்து நீடிக்கிறது. ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்த லுஹான்ஸ்க், டொனட்ஸ்க் மற்றும் ரஷ்ய படையினர் கைப்பற்றிய கெர்சன், ஜபோரிஜியா பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான பொது வாக்கெடுப்பு கடந்த வாரம் நடத்தப்பட்டது. இதில், பெரும்பாலான மக்கள் தங்கள் பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பதற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்து இருப்பதாக ரஷ்யா கூறியுள்ளது.  

இந்நிலையில், கிரெம்ளின் மாளிகையில் உள்ள புனித ஜார்ஜ் அரங்கில் கோலாகலமாக நேற்று நடந்த நிகழ்ச்சியில், உக்ரைனின் இந்த பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைக்கும் அதிகாரப்பூர்வ ஆணையில் அதிபர் புடின் கையெழுத்திட்டார். அதில், `தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சன், ஜபோர்ஜியா பகுதிகளின் இறையாண்மை, சுதந்திரத்தை அங்கீகரிக்க உத்தரவிடுகிறேன்,’ என்று புடின் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இது ஐநா சாசனத்தை மீறும் செயல் என்று ஐநா.வும், உக்ரைன் பிராந்தியங்களை இணைப்பது சட்ட விரோதமான நில அபகரிப்பு என்று அமெரிக்காவும் ரஷ்யாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ரஷ்ய ராணுவ குண்டுவீச்சில் 23 பேர் பலி
உக்ரைன் பிராந்தியங்களை இணைக்கும் நிகழ்ச்சி ரஷ்யாவில் நடந்து கொண்டிருந்த நிலையில், ஜபோரிஜியாவில் பொதுமக்கள் சென்ற வாகனம் மீது ரஷ்ய ராணுவம் நடத்திய குண்டுவீச்சில் 23 பேர் பலியாகினர். மேலும், 28 பேர் காயமடைந்தனர்.

Tags : Ukraine ,Russia ,Putin , Annexation of Ukrainian regions to Russia: Putin signs decree
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...