×

முப்படை தலைமை தளபதி பதவியேற்பு: சவால்களை சந்திக்க தயார் என சூளுரை

புதுடெல்லி: முப்படைகளின் தலைமை தளபதியாக நேற்று பொறுப்பேற்ற  அனில் சவுகான், நாட்டின் பாதுகாப்பை இன்னும் பலப்படுத்தி அனைத்து சவால்களையும் சந்திக்க தயார் என சூளுரைத்தார். ராணுவம், விமானப்படை, கப்பற்படை என முப்படைகளை ஒருங்கிணைத்து செயல்படும் வகையில் முப்படைகளின் தலைமை தளபதி பதவி, கடந்த 2019ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.  இதன் முதல் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்ட பிபின் ராவத்,   கடந்தாண்டு நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார். பின்னர்,  கடந்த 9 மாதங்களாக இப்பதவி காலியாக இருந்தது. இந்நிலையில், முப்படைகளின் தலைமை தளபதியாக ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் தளபதி அனில் சவுகான் நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார்.

நேற்று அவர் இப்பதவியை ஏற்றார். டெல்லியில் அவருக்கு முப்படைகளின் சார்பில் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. பிறகு, சவுகான் கூறுகையில், ‘‘பாதுகாப்பு படையில் மிக உயர்ந்த பதவியை ஏற்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். முப்படைகளின் எதிர்பார்ப்பை தலைமை தளபதி என்ற முறையில் நிறைவேற்ற முயற்சிப்பேன். நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கையை இன்னும் பலப்படுத்த முயற்சிப்பேன். நாட்டுக்கான அனைத்து சவால்களையும், சிரமங்களையும் ஒன்றாக சமாளிப்போம்,’’ என்றார். உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த அனில் சவுகான் (61), கடந்தாண்டு கிழக்கு பிராந்திய ராணுவ தளபதியாக இருந்த போது ஓய்வு பெற்றார்.

Tags : Commander ,in , Inauguration of the Commander-in-Chief of the Triforce: Ready to face challenges
× RELATED இந்திய விமான படையின் முன்னாள் தலைமை...