பெண் நீதிபதியிடம் இம்ரான் மன்னிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பெண் நீதிபதியிடம் மன்னிப்பு கோரினார். இஸ்லாமாபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இம்ரான் கான், தனது உதவியாளர் ஷபாஸ் கில் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக எச்சரித்தார். மேலும், கில்லை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கிய கூடுதல் செஷன்ஸ் பெண் நீதிபதி ஜெபா சவுத்ரி மீது நடவடிக்கை எடுப்பதாகவும் மிரட்டினார். இதனால், அவர் மீது தீவிரவாத ஒழிப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.  

இந்நிலையில், இம்ரான் கான் தமது வழக்கறிஞருடன் நேரில் ஆஜராகி தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்துக்கு நேற்று சென்றார். ஆனால், அந்த பெண் நீதிபதி விடுப்பில் இருப்பதாக அவரது உதவியாளர் கூறினார். அதற்கு இம்ரான் கான், `மேடம் ஜெபா சவுத்ரியிடம் இம்ரான் கான் வார்த்தைகள் உங்களை புண்படுத்தி இருந்தால் நேரில் பார்த்து மன்னிப்பு கேட்க வந்தார் என்று சொல்லுங்கள்,’ என்று கூறினார். இந்த வீடியோவை இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சார் கட்சியினர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

Related Stories: