ரெப்போ வட்டி 4வது முறையாக உயர்வு; வீடு, வாகன கடன் தவணை அதிகரிக்கும் அபாயம்: பண வீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை

மும்பை: குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டியை ரிசர்வ் வங்கி மீண்டும் 0.5 சதவீதம் அதிகரித்து, 5.9 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. இதனால் வீடு, வாகன, தனிநபர் கடன்களுக்கான இஎம்ஐ அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாரத ரிசர்வ் வங்கி, 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை மறு சீராய்வு கூட்டத்தை நடத்தி வருகிறது. இதில் கடன் வட்டி விகிதம் உட்பட பல்வேறு கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா ஊரடங்கின்போது ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் தொழில்கள் நலிவடைந்தன. இதனால், குறைந்த வட்டியில் கடன் கிடைப்பதை உறுதி செய்யவும், பணப்புழக்கத்தை அதிகரிக்கவும் பல்வேறு சலுகை அறிவிப்புகளை வெளியிட்டது.

இதுபோல், குறுகிய கால கடன் எனப்படும் ரெப்போ வட்டியையும் குறைத்தது. ரெப்போ வட்டி என்பது, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டியாகும். ரெப்போ வட்டி அடிப்படையில் வங்கிகள் தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்கின்றன. இந்த மாதத்துக்கான ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை சீராய்வு கூட்டம், அதன் கவர்னர் சக்தி காந்ததாஸ் தலைமையில், கடந்த 28ம் தேதி தொடங்கியது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளை சக்தி காந்ததாஸ் நேற்று வெளியிட்டார். இதன்படி  ரெப்போ வட்டி 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டு, 5.9 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்துடன், கடந்த மே மாதத்தில் இருந்து தொடர்ந்து 4வது முறையாக ரெப்போ வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.

மொத்தம் 1.4 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கடந்த 2019 ஏப்ரலில் ரெப்போ வட்டி 5.4 சதவீதமாக இருந்தது. இத்துடன் ஒப்பிடுகையில் ரெப்போ வட்டி புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ரெப்போ வட்டி அடிப்படையில் வங்கிகள் தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டியை நிர்ணயம் செய்கின்றன. இதனால், வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன் வட்டியும், அதற்கேற்ப இஎம்ஐயும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு உயர்த்தப்பட்ட ரெப்போ வட்டிக்கு ஏற்ப வங்கிகள் கடன் வட்டியை உயர்த்தி விட்டன. மேலும் வட்டியை உயர்த்துவது, வீடு வாங்குவோரை கடுமையாக பாதிக்கும் என ரியல் எஸ்டேட் துறையினர் தெரிவிக்கின்றனர்.

தற்போதைய ரெப்போ வட்டி உயர்வின்படி வங்கிகள் வட்டியை உயர்த்தினால் ரூ40 லட்சம் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு இஎம்ஐ ரூ2000 வரை உயரலாம் எனவும் அவர்கள் கூறினர். இதுபோல், நடப்பு ஆண்டில் பண வீக்கம் 6.7 சதவீதமாக இருக்கும் எனவும், இது 2ம் காலாண்டில் 7.1 சதவீதம், 3ம் காலாண்டில் 6.5 சதவீதம், 4ம் காலாண்டில் 5.8 சதவீதம் எனவும் இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. அதேநேரத்தில், அடுத்த நிதியாண்டில் சில்லறை விலை பண வீக்கம் 5 சதவீதமாக குறையலா ம் எனவும் ரிசர்வ் வங்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

 இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் விலை, நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் பேரல் 104 டாலராக உள்ளது.

தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், இதுபோல் தொடர்ந்து நீடித்தால், பண வீக்கம் கட்டுக்குள் வர வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும், நடப்பு நிதியாண்டின் 2ம் காலாண்டில் கச்சா எண்ணெய் பேரல் 100 டாலராக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 7 சதவீதமாக குறையும். இது முன்பு 7.2 சதவீதமாக கணிக்கப்பட்டிருந்தது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், எதிர்பார்த்ததை விட மிக குறைவாகவே இருந்தது. இதற்கு சர்வதேச பொருளாதார மந்த நிலை காரணமாக இருக்கலாம்.

எனினும், இந்த மந்த நிலை பாதிக்காத அளவுக்கு இந்திய பொருளாதாரம் ஸ்திரத்தன்மையுடன்தான் இருக்கிறது. கடந்த ஜனவரி - மார்ச் காலாண்டில் ஜிடிபி 4.6 சதவீதமாக இருந்தது. வங்கிகள் கடன் வழங்கல் 16.2 சதவீதம் வளர்ச்சி அடைந்திருந்தது. பிராந்திய ஊரக வங்கிகள் ஆன்லைன் வங்கிச்சேவையை வழங்க அனுமதிக்கப்பட்டுளளது. இது ஊரக பகுதிகளில் ஆன்லைன் வங்கிச்சேவை பயன்பாட்டை அதிகரிக்க உதவும். இதற்கேற்ப புதிய நெறிமுறைகள் வெளியிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் அதே நேரத்தில், பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கும் முடிவுகளையும் எடுக்க வேண்டியுள்ளது. பண வீக்கத்தை 6 சதவீதத்துக்குள் கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்புக் கணக்கு பற்றாக்குறை இந்த நிதியாண்டில் 3 சதவீதத்துக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என சக்தி காந்ததாஸ் தெரிவித்தார்.

Related Stories: