×

நில அபகரிப்பு விவகாரம்; ஜெயக்குமார் மீதான வழக்கு ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நில அபகரிப்பு புகாரில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ் என்பவருக்கும் பிரச்னை இருந்து வந்தது. இதில் தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாக ஜெயகுமாருக்கு எதிராக மகேஷ் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் ஜெயக்குமார், அவரது மகள் ஜெயபிரியா மற்றும் அவரது மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், இந்த  வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. ஜெயக்குமார் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி, மனுதாரர் மருமகனின் சகோதரர் மகேஷ் அளித்த பொய் புகாரில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு 2016ல் நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த  சம்பவத்திற்கு 2021ம் ஆண்டு தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று வாதிட்டார். புகார்தாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2016ம் ஆண்டு ஜெயக்குமார் அமைச்சராக இருந்ததால் புகார் அளிக்க இயலவில்லை என்று தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவரது மகள், மருமகனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Tags : Jayakumar ,Madras High Court , Land Expropriation Issue; Case against Jayakumar quashed: Madras High Court orders
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...