போலி ஆவணம் மூலம் பாஸ்போர்ட் உதவிகமிஷனர் உட்பட 37 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல்

மதுரை: மதுரையில் கடந்த 2019ல் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்றதாக கியூ பிராஞ்ச் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் பாஸ்போர்ட் அலுவலக அலுவலர்கள், தபால்துறையினர், போலீசார் உள்ளிட்ட 40 பேருக்கு எதிராக பாஸ்போர்ட் சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கின் துவக்க கட்ட குற்றப்பத்திரிகை மதுரை ஜேஎம் 4 நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு பதியப்பட்டவர்களில் முகம்மது காசிம், கோமதி ஆகியோர் இறந்தனர்.இந்த வழக்கின் விசாரணை மாஜிஸ்திரேட் பாக்யராஜ் முன் நேற்று துவங்கியது. இதற்காக, அப்போதைய நுண்ணறிவுப்பிரிவு உதவி கமிஷனர் சிவக்குமார், அவனியாபுரம் இன்ஸ்பெக்டராக இருந்த இளவரசன், ஏட்டு கந்தசாமி உள்ளிட்ட 37 பேர் ஆஜராகினர். அனைவரிடமும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. அவர்கள் மீதான குற்றச்சாட்டைப் பொறுத்து 700 பக்கம் முதல் ஆயிரம் பக்கம் வரையிலான குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இதை 37 பேரும் பெற்றுக் கொண்டனர். இதையடுத்து வழக்கின் விசாரணையை அக். 28க்கு தள்ளி வைத்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

Related Stories: